Breaking News
ரூ.1000, அரிசி, கரும்பு, சர்க்கரை பொங்கல் பரிசு இன்று முதல் விநியோகம்: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

சென்னை:

தமிழ்நாட்டில் உள்ள 33 ஆயிரம் ரேஷன் கடைகளில், இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கப்படுகிறது. ரூ.1000 ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு நீள கரும்பு ஆகியவை வழங்கப்பட உள்ளது. சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு தொகுப்புகளை வழங்கி தொடங்கி வைக்கிறார். தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி வெகுவிமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.

அந்தவகையில் இந்தாண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பாக தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கக்கூடிய குடும்பங்கள் என மொத்தம் 2.19 கோடி பேருக்கு வேட்டி, சேலை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 6 அடியில் முழு கரும்புடன் ரூ.1000 ரொக்கம் இன்று முதல் வழங்கப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம் அருகே உள்ள அன்னை சத்தியா நகர் நியாயவிலை கடையில் தொடங்கி வைக்க உள்ளார்.

பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க தமிழக அரசு ரூ.2,429 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ஏற்கனவே, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல் தொடர்பாக ரேஷன் கடைகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் அனுப்பப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை  தவிர்க்கும் விதமாக, தெருக்கள் வாரியாக டோக்கன்கள் கடந்த 3ம் தேதியில் இருந்து வீடுவீடாக வழங்கி முடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரத்தை பொறுத்து பொதுமக்கள் பரிசு தொகுப்புகளை வாங்கி செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் பூட்டிய வீடுகள், வெளியூர் சென்றவர்கள் சிலருக்கு டோக்கன் சென்றடையாத சிலர் 13ம் தேதி நேரடியாக ரேஷன் கடைகளுக்கு சென்று குடும்ப அட்டைகளை காண்பித்து பொங்கல் பரிசு தொகுப்புகளை பெற்றுக்கொள்ளலாம். பொங்கல் பரிசு தொகுப்பிற்கான பொருட்கள் அனைத்து ரேஷன் கடைகளிலும் தயாராக உள்ளன. பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்டவை இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், பொதுமக்களுக்கு வழங்கப்படும் கரும்பு நேரடியாக விவசாயிகளிடம் இருந்து 5 ஆயிரம் ஹெக்டர் அளவில் கொள்முதல் செய்யப்பட்டு கடைகளில் குவிக்கப்பட்டுள்ளன.

ரொக்க பணம் ரூ.1000 முறைப்படி அனைத்து ரேஷன் கடைகளின் அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கும் வழங்கும் பொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும் என்ற முதல்வரின் உத்தரவின்படி, தொடர்ந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் கூடுதல் தலைமைச்செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு தங்கு தடையின்றி பொருட்களை விநியோகம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

இதேபோல், மாவட்ட வாரியாக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை இன்று முதல் வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.