
முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மாணவர்களுக்கான பல திட்டங்கள் போன்றவைகளை பாராட்டுவதில் எந்த தயக்கமும் இல்லை – புகழேந்தி தூத்துக்குடியில் பேட்டி
தூத்துக்குடி அருகே திருமண விழா வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் பேசி வருகின்றனர். இதனை முற்றிலும் தவறானது. அவர் ராமஜென்மபூமிக்கு கரசேவகர்களை அனுப்பியதாக கூறுவதும் முற்றிலும் பொய்யானதாகும். அவர், அனைத்து மதத்தினருக்கும், சாதியினருக்குமான தலைவராக இருந்தார். அவரைப் பற்றி இவ்வாறு கூறுவதை எப்போதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். ஒருவேளை இந்துத்துவா தலைவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதோ என சந்தேகம் உள்ளது.
ராமநாதபுரத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெற்றிக்காக காத்திருக்கிறோம் அவர் மாபெரும் வெற்றியை பெறுவார் என நம்புகிறோம். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஒரு இடத்திலும் வெற்றி பெறப் போவதில்லை. அவர் அடுத்தமுறை தூத்துக்குடிக்கு வரும்போது பொதுச் செயலாளராக இருக்க மாட்டார்..
முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மாணவர்களுக்கான திட்டங்கள் போன்றவைகளை பாராட்டுவதில் எந்த தயக்கமும் இல்லை. ஆனால் ஒரு சில இடங்களில் மின்சாரம் துண்டிப்பு என்பது முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்ல விரும்புகிறேன் மின்சார துண்டிப்பு இல்லாமல் இருப்பது உங்கள் கடமை மின்சார துண்டிப்பு இல்லாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோடநாடு கொலை வழக்கில் மட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை ஊழல் குற்றச்சாட்டிலும் கைது செய்யப்படவில்லை. இதை சொல்வதால் முதல்வர் கோவித்துக் கொண்டாலும் பரவாயில்லை கோடநாடு கொலை வழக்கு 3 1/2 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டே சென்று விட்டது ஒருவரை கூட கைது செய்யப்படவில்லை எதற்காக வேடிக்கை பார்க்கிறார்கள் என்பது தெரியவில்லை என்று அவர் கூறினார்.