
அமைச்சர் கீதா ஜீவனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் திடீர் திருப்பம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
மறைந்த முன்னாள் திமுக எம்.எல்.ஏவும் அமைச்சர் கீதா ஜீவனின் தந்தையுமான என்.பெரியசாமி மீது 2003-ம் ஆண்டு அதிமுக ஆட்சிகாலத்தில் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில், 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் தூத்துக்குடி எம்.எல்.ஏவாக இருந்த என்.பெரியசாமி வருமானத்திற்கு அதிகமாக 2 கோடியே 31 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது பஞ்சாயத்து தலைவராக இருந்த கீதா ஜீவன் உட்பட அவரது குடும்பத்தினர் 6 பேர் மீதும் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. கீதாஜீவனின் தந்தை உயிரிழந்த நிலையில், மீதமுள்ள அமைச்சர் கீதாஜீவன் உள்பட 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி கீதா ஜீவன் உள்ளிட்டோரை தூத்துக்குடி நீதிமன்றம் கடந்த 2022ஆம் ஆண்டு விடுவித்தது. இந்த வழக்கை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்படவில்லை.
இந்நிலையில் தொகுதி வாக்காளர் என்ற முறையில் கீதாஜீவனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்ய வழக்கின் எஃப்ஐஆர், சாட்சியங்கள், தீர்ப்பு உள்ளிட்ட ஆவணங்கள் கேட்டு வழக்கறிஞர் சண்முக சுந்தரம் என்பவர் தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஆனால், வழக்கில் தொடர்புடையவராகவோ அல்லது பாதிக்கப்பட்டவராகவோ இல்லை என்று கூறி, ஆவணங்களை வழங்க மறுத்தது நீதிமன்றம்.
இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும், ஆவணங்களை வழங்கக் கோரியும் சண்முக சுந்தரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “தொகுதி வாக்காளர் என்ற அடிப்படையில் மக்கள் பிரதிநிதி மீதான வழக்கு தீர்ப்பின் விவரங்களை அறிந்துகொள்ள மனுதாரருக்கு உரிமை உள்ளது” என்று தெரிவித்தார்.
விசாரணை அமைப்புகள் மேல்முறையீடு செய்யவில்லை என்றால், வாக்காளர் என்ற முறையில் மனுதாரர் மேல்முறையீடு செய்யலாம் என்று கருத்து தெரிவித்த நீதிபதி, அதற்காக வழக்கு உள்ளிட்ட ஆவணங்களை வழங்க மறுப்பு தெரிவிக்கக் கூடாது. ஆவணங்களைக் கேட்டு மனுதாரர் மீண்டும் விண்ணப்பிக்கலாம். அதன் அடிப்படையில் 15 நாட்களுக்குள் ஆவணங்களின் நகல்களை வழங்க வேண்டும் என்று தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.