என்.எஸ்.ஜி.,யில் இந்தியா உறுப்பினராக டிரம்ப் அரசு ஆதரவு
வாஷிங்டன்: என்.எஸ்.ஜி.,யில் இந்தியா உறுப்பினராவதற்கு தொடர்ந்து ஆதரவு வழங்கப்படும் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
என்.எஸ்.ஜி.,:
என்.எஸ்.ஜி., எனப்படும் அணுசக்தி வினியோக நாடுகள் குழுமத்தில் உறுப்பினராக, விண்ணப்பித்துள்ள இந்தியா, அதற்காக, நீண்டகாலமாக தீவிரமாக முயற்சித்து வருகிறது. மத்திய அரசின் முயற்சிக்கு, என்.எஸ்.ஜி., உறுப்பு நாடுகளில் ஒன்றான, சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து, முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
ஆதரவு:
‛அமெரிக்கர்களுக்கு முக்கியத்துவம்’ என்ற அறிவிப்புடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப் ஆட்சியில், இந்தியாவுடனான நட்புறவில் மாற்றம் ஏற்படுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில் என்.எஸ்.ஜி.,யில் இந்தியா உறுப்பினராவதற்கு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு தொடர்ந்து ஆதரவு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாவது: என்.எஸ்.ஜி.,யில் உறுப்பினராக இந்தியா இணைவதை அமெரிக்கா ஆதரிக்கிறது. இந்தியாவின் இந்த முயற்சிக்கு உத்வேகம் அளிக்க, இந்தியாவுடன் இணைந்து பிற உறுப்பு நாடுகளின் ஆதரவைத் திரட்ட அமெரிக்காவும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. என்.எஸ்.ஜி.,யில் இந்தியா உறுப்பினராக விரைவில் இணையும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.