Breaking News
ஹைட்ரோகார்பன் திட்டம் : இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

தமிழகத்தின் நெடுவாசல் உள்ளிட்ட இடங்களில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டங்கள் குறித்த 2 ஒப்பந்தங்கள் இன்று (மார்ச் 27) மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் கையெழுத்தாக உள்ளது.

எதிர்ப்பு போராட்டம் :

நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. இதனையடுத்து நெடுவாசல் பகுதியில் ஜெம் லேபராட்டரீஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கும், காரைக்கால் பகுதியில் பாரத் பெட்ரோ ரிசோர்ஸ் என்ற அரசு நிறுவனத்துக்கும் அனுமதியளிக்கப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கடும் எதிர்ப்பு எழுந்தது. பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று பேசியதாலும், நெடுவாசல் போராட்டக் குழுவினர் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சரை சந்தித்து பேசிய போது நல்ல முடிவு எட்டப்பட்டதாலும் சில இடங்களில் மார்ச் 9 ம் தேதியும், மற்ற இடங்களில் மார்ச் 25 ம் தேதியும் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மத்திய அரசு அறிவிப்பு :

இந்நிலையில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில், இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டங்கள் குறித்த ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாக உள்ளது. டில்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் இத்திட்டத்தில் டெண்டர் எடுத்துள்ள 22 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுக்கின்றன. இந்த டெண்டர்கள் மூலம் 62 மில்லியன் மெட்ரிக் டன் எண்ணெய் மற்றும் எரிவாயு கிடைக்கும் என்றும், சுமார் 37 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொன்னார் விளக்கம் :

ஹைட்ரோகார்பன் திட்ட ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது தொடர்பாக டுவிட்டரில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர்,ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களோடு மட்டுமே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. புதிய நிறுவனங்கள் எவற்றுடனும் ஒப்பந்தம் போடவில்லை.எனவே, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து என்ற செய்தியை வைத்து யாரும் குழப்பமடைய வேண்டாம்.நெடுவாசல் போராட்டக்குழுவினரிடம் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளது போன்று, மக்களின் ஆதரவில்லாமல், ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது என நான் நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.