எமி ஜாக்சன் நடனம், கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா இன்று தொடக்கம்
ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழாவின் 10-வது சீசன் போட்டிகள் இன்று கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் ஹைதராபாத்தில் தொடங்குகிறது. தொடக்க விழாவில் நடிகை எமி ஜாக்சன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் கலந்து கொள்ளும் நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதை தொடர்ந்து நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து விளையாட உள்ளது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 10-வது சீசன் இன்று முதல் வரும் மே 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கிரிக்கெட் திருவிழாவில் 56 லீக் ஆட்டங்கள், பிளே ஆப் சுற்றில் 3 ஆட்டங்கள் இறுதிப் போட்டி என மொத்தம் 60 ஆட்டங்கள் நடைபெறுகிறது.
பிளே ஆப் சுற்றின் முதல் ஆட்டம் மே 16-ம் தேதி மும்பையிலும், எலிமினேட்டர் ஆட்டம் 17-ம் தேதியும், 2-வது தகுதி சுற்று ஆட்டம் மே 19ம் தேதி பெங்களூருவிலும் நடைபெறுகிறது.
47 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் நடப்பு சாம்பியனான சன் ரைசர்ஸ் ஐதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டேவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ் ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன.
வழக்கமாக ஐபிஎல் தொடரின் தொடக்க விழா போட்டி தொடங்குவதற்கு முந்தைய நாள் ஒரு இடத்தில் மட்டுமே நடத்தப்படும். இம்முறை போட்டியை நடத்தும் 8 இடங்களில் தொடக்க விழா நடத்தப்பட உள்ளது. அணி உரிமையாளர்கள் தனித்தனியாக தங்களது அணியின் சொந்த நகரத்தில் தொடக்க விழாவை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி ஹைதராபாத் (5-ம் தேதி), புனே (6-ம் தேதி), ராஜ்கோட் (7-ம் தேதி), இந்தூர் (8-ம் தேதி), பெங்களூரு (8-ம் தேதி), மும்பை (9-ம் தேதி), கொல்கத்தா (13-ம் தேதி), டெல்லி (15-ம் தேதி) என ஒவ்வொரு அணிகளின் சொந்த மண்ணிலும் தொடக்க விழா நடைபெறுகிறது.
தொடக்க விழா நிகழ்ச்சிகள் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. அப்போது அணியின் கோப்பை அறிமுகம் செய்யப்படும். தொடர்ந்து 8 அணிகளின் கேப்டன்களின் அணி வகுப்பும், வீரர்கள் உறுதிமொழி ஏற்பும் நடைபெறும். இதை தொடர்ந்து நடிகை எமி ஜாக்சன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் கலந்து கொள்ளும் நடன நிகழ்ச்சி, கண்கவர் லேசர் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இதையடுத்து 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கடந்த ஆண்டு 2-வது இடத்தை பிடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. விராட் கோலி, டி வில்லியர்ஸ் ஆகியோர் விளையாடாததால் வாட்சன் தலைமையில் பெங்களூரு அணி களமிறங்குகிறது.
தொழில்முறை டி20 போட்டி களில் 10 ஆயிரம் ரன்களை நெருங்கும் சிக்ஸர் மன்னன் கிறிஸ் கெய்ல் முதல் ஆட்டத்திலேயே ரசிகர்களுக்கு விருந்து படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க விழா மற்றும் போட்டியை சோனி குழும சானல்களான செட் மேக்ஸ், சோனி சிக்ஸ், சோனி இஎஸ்பிஎன் ஆகியவை நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
தொடக்க விழா நிகழ்ச்சியை யொட்டி இந்திய அணிக்காக சிறந்த சேவையாற்றிய சச்சின், சேவக், திராவிட், கங்குலி, லட்சுமண் ஆகிய 5 பேரை கவுரவிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இம்முறை பிசிசிஐ-யை வினோத் ராய் தலைமையிலான நிர்வாகிகள் குழுவே நிர்வகித்து வருவதால், ஐபிஎல் தொடரின் ஆட்டங்களை நடத்துவதில் சிக்கல் ஏதும் எழாமல் இருக்க போட்டியை நடத்தும் அந்தந்த மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு தேவையான நிதியை வழக்கத்துக்கு மாறாக முன்னதாகவே விடுவித்துள்ளது.
எப்போதும் இல்லாத அளவில் இம்முறை அதிக அளவிலான வீரர்கள் தொடர் தொடங்குவதற்கு முன்பே காயம் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். இந்த வகையில் விராட் கோலி, டி வில்லியர்ஸ் ஆகியோர் தொடரின் முதல்கட்ட ஆட்டங்களில் பங்கேற்கவில்லை.
அஸ்வின், முரளி விஜய், கே.எல்.ராகுல் ஆகியோர் காயம் காரண மான முழுமையாக தொடரில் இருந்து விலகி உள்ளனர். வெளி நாட்டு வீரர்களில் குயிண்டன் டி காக் காயம் காரணமாகவும், டுமினி சொந்த காரணங்களுக்காகவும் இம்முறை விளையாடவில்லை. ஸ்டார்க், மிட்செல் மார்ஷ், பீட்டர்சன் ஆகியோரும் இந்த பட்டியலில் ஐக்கியமே.
டிவில்லியர்ஸ், ஜடேஜா, உமேஷ் யாதவ் ஆகியோருடன் ஸ்ரேயஸ் ஐயரும் தற்போது காயம் அடைந்தவர்களின் பட்டியலில் இணைந்துள்ளார். இவர்கள் 4 பேரும் முதற்கட்ட ஆட்டங்களில் பங்கேற்கவில்லை. பயிற்சியின் போது காயம் அடைந்த இளம் வீரரான சர்ப்ராஸ் கான் தொடரில் இருந்து முழுமையாக விலகும் நிலையில் உள்ளார்.
காயம் அடைந்தவர்களின் பட்டியல் தினமும் நீண்டுக் கொண்டே செல்வது அணி நிர்வாகிகளை கலக்கம் அடைய செய்துள்ளது. எனினும் மற்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும் என்பது ஆறுதலான விஷயம்.
இந்த சீசனில் ரூ-14.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள பென் ஸ்டோக்ஸ் (புனே அணி), ரூ.12 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட டைமல் மில்ஸ் (பெங்களூரு), தலா ரூ.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட டிரென்ட் போல்ட் (கொல்கத்தா), ரபாடா (டெல்லி), ரூ.4.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட பாட் கம்மின்ஸ் (டெல்லி) ஆகிய வெளிநாட்டு வீரர்கள் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
இதபோல் இந்தியாவில் நடைபெற்ற உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கும் இந்த தொடர் நல்ல வாய்ப்பாக கருதப்படுகிறது. இந்த தொடரில் அவர்கள் குவிக்கும் ரன்கள் தேர்வுக்குழுவினரின் கவனத்தை ஈர்க்கக்கூடும். ஜூன் மாதம் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ளதால் இளம் வீரர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தி தேசிய அணியில் இடம் பிடிப்பதற்கான சாத்திய கூறுகளை அதிகமாக்கிக் கொள்ள முயற்சிப்பார்கள்.
இளம் வீரர்களில் தமிழகத்தை சேர்ந்த முருகன் அஸ்வின், நடராஜன் ஆகியோருடன் இஷான் கிஷன், ரிஷப் பந்த், ராகுல் சஹார், அனிகெட் சவுத்ரி, மனன் வோரா, கெஜ்ரோலியா, கரண் சர்மா, கவுசிக் கவுதம், ராகுல் திவேதியா, இக்லாவியா திவேதி, முகமது சிராஜ், நது சிங், ஷர்துல் தாக்குர், இஷான் ஜக்கி, சயன் கோஷ், ரிஷி தவண் ஆகியோர் மீதும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
ரூ.21 கோடி பரிசு
ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு கோப்பையுடன் ரூ.21 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.11 கோடி கிடைக்கும். 3-வது மற்றும் 4-வது இடம் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.8 கோடி வழங்கப்படும்.
அணிகள் விவரம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
ஷான் வாட்சன் (கேப்டன்), டிவில்லியர்ஸ், விராட் கோலி, கிறிஸ் கெய்ல், நாத் அர்விந்த், அவேஷ் கான், சாமுவேல் பத்ரி, ஸ்டூவர்ட் பின்னி, யுவேந்திரா சாஹல், அனிகெட் சவுத்ரி, பிரவீன் துபே, டிரெவிஸ் ஹெட், இக்பால் அப்துல்லா, கேதார் ஜாதவ், சர்ப்ராஸ் கான், மன்தீப் சிங், டைமல் மில்ஸ், ஆடம் மில்னே, பவன் நெகி, ஹர்ஷால் படேல், சச்சின் பேபி, தப்ராசி ஷம்சி, பில்லி ஸ்டான்லேக்.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்:
டேவிட் வார்னர் (கேப்டன்), தன்மே அகர்வால், வில்லியம்சன், யுவராஜ் சிங், ரிக்கி புயி, பிபுல் சர்மா, பென் கட்டிங், ஷிகர் தவண், திவேதி, மொயிசஸ் ஹென்ரிக்ஸ், தீபக் ஹூடா, கிறிஸ் ஜோர்டான், சித்தார்த் கவுல், புவனேஷ்வர் குமார், பென் லாக்லின், அபிமன்யு மிதுன், முகமது நபி, முகமது சிராஜ், முஸ்டாபிஜூர் ரஹ்மான், ஆஷிஸ் நெஹ்ரா, நமன் ஓஜா, ரஷித் கான், விஜய் சங்கர், பரிந்தர் ஷரன், பிரவீண் தாம்பே.