ஐசிசி கூட்டத்தில் பங்கேற்க என்.சீனிவாசனுக்கு அனுமதி மறுப்பு
ஐசிசி கூட்டத்தில் பங்கேற்பதற்கு என்.சீனிவாசனுக்கு தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம் அவருக்குப் பதிலாக பிசிசிஐயின் பொறுப்புச் செயலாளர் அமிதாப் சவுத்ரி பங்கேற்க அனுமதி அளித்துள்ளது.
லோதா கமிட்டியின் முக்கிய மான பரிந்துரைகளை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் பிசிசிஐயை சீர்படுத்துவதற்கான பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் வரும் 24-ம் தேதி துபையில் நடைபெறவுள்ளது. இதில் பிசிசிஐ சார்பில் பிரதிநிதியாக யாரை அனுப்புவது என்பது தொடர்பாக கேள்வி எழுந்தது.
இதையடுத்து ஐசிசி கூட்டத்தில் பிசிசிஐ சார்பில் பங்கேற்க தகுதியானவர்கள் யார், என்பதை தெளிவுப்படுத்துமாறு பிசிசிஐ நிர்வாகிகள் குழு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு, ‘என்.சீனிவாசன் மீதான குற்றச் சாட்டு உறுதி செய்யப்பட்டி ருப்பதால், அவருக்கு மாற்றாக பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுத்ரி ஐசிசி கூட்டத்தில் பங்கேற் கலாம். அதற்கு இந்த நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது’என உத்தரவிட்டது. மேலும் இந்த கூட்டத்தில் பிசிசிஐ-யின் தலைமை செயல் அதிகாரியான ராகுல் ஜோஹ்ரியும் பங்கேற்கலாம் என தெரிவித்தது.
முன்னதாக கடந்த 10-ம் தேதி பிசிசிஐ வழக்கு குறித்து விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் மற்றும் டி.ஓய்.சந்திராசூட் அடங்கிய அமர்வு, ‘பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களின் அலுவல்களில் பங்கேற்பதற்கு தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஐசிசி கூட்டங்களிலும் பங்கேற்க கூடாது’ என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.