முடிவுக்கு வருகிறது ஏர்பஸ், போயிங் ஆதிக்கம் : சீனாவே தயாரித்த பயணிகள் விமானம் தயார்
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் பயணிகள் விமானத்தின் வெள்ளோட்டத்தை சீனா வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
2008ம் ஆண்டு முதல் பயணிகள் விமான தயாரிப்பில் சீனா முயற்சி மேற்கொண்டு வந்தது. சீன அரசு நிறுவனமான சீன வர்த்தக விமான கழகம் (காமக்) இதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தது. 158 பேர் அமரும் வசதி கொண்ட சி919 என்ற பயணிகள் விமானத்தை தயாரித்தது. இந்த தயாரிப்பில் சில குறைபாடு இருந்ததாக தெரிகிறது. ஆகையால், அந்த விமானத்தை அறிமுகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் 2014ம் ஆண்டு முதல் இதன் அறிமுகம் 2 முறை தள்ளி போனது. இந்த நிலையில் 2015 நவம்பர் மாதத்தில் ஷாங்காயில் சி919 பயணிகள் விமானத்தை வெளியிட்டது.
இந்த சூழ்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, அதிவேக டாக்சி சோதனையை சி919 விமானம் வெற்றிகரமாக நிறைவு செய்தது. மேலும், சீன விமான போக்குவரத்து துறை நிர்வாகத்திடம், இந்த விமானத்துக்கு சிறப்பு விமான அனுமதியையும் காமக் பெற்றுவிட்டது. மே மாதம் ஷாங்காய் புடாங் சர்வதேச விமான நிலையத்தின் 4வது ஓடுதளத்தில் சி919 தனது முதல் வர்த்தக பயணத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, கனடா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் சொந்தமாக விமானங்கள் தயாரிக்கும் பட்டியலில் இடம் ெபற்றுள்ளன. சி919 விமானத்தை உள்நாட்டு விமான சேவை நிறுவனங்கள் வாங்க தொடங்கி விட்டால் சீனாவும் இந்த பட்டியலில் இடம் பெற்று விடும்.
இது மட்டுமின்றி, சர்வதேச விமான தயாரிப்பு சந்தையிலும் பெரிய மாற்றங்கள் ஏற்படும். தற்போது, பிரான்சின் ஏர்பஸ்சும், அமெரிக்காவின் போயிங்கும் மட்டுமே விமான தயாரிப்பு சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பயணிகள் விமான வர்த்தகத்தில் சீனா களமிறங்கும் சூழ்நிலையில் அந்த நிறுவனங்கள் பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். 48.80 கோடி பயணிகள்: சீன விமான நிறுவனங்களின் விமானங்கள் கடந்த 2016ம் ஆண்டில் 48.80 கோடி பயணிகளை சுமந்து சென்றுள்ளன. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 12 சதவீதம் அதிகமாகும். மேட் இன் சீன விமான பயணம் வெற்றிகரமாக அமைந்து விட்டால், சீனா விமான நிறுவனங்களில் சி919 ரக விமானங்கள் அதிகம் இடம் பெறுவது நிச்சயம்.