புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் : விபரம் தெரியாமல் மக்கள் அவதி
புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க தெரியாமல், மக்கள் அவதிப்படுவதால், அவர்களின் அறியாமையை பயன்படுத்தி, பலர் வசூலில் ஈடுகின்றனர். புதிய ரேஷன் கார்டுக்கு, உணவு வழங்கல் உதவி ஆணையர் அல்லது வட்ட வழங்கல் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு, ஏற்கனவே உள்ள ரேஷன் கார்டில் இருந்து, பெயர் நீக்கிய சான்று அல்லது தடையில்லா சான்று
அவசியம். இதையடுத்து, பெயர் நீக்கல் சான்று பெற, அலுவலகத்துக்கு செல்பவர்களிடம், ஊழியர்கள், பணம் வசூல் செய்தனர். அதை தடுக்க, தற்போது, ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டு தரப்படுகிறது.
இதற்கு, ஆதார் விபரம் மட்டும் போதும். அந்த விபரம் தெரியாமல், பெயர் நீக்கல் சான்று கேட்டு, அலுவலகத்துக்கு செல்லும் மக்களிடம், பலர் தொடர்ந்து பணம் வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: திருமணம் ஆனவர்கள், புதிய ரேஷன் கார்டு பெற விரும்புவோர், முதலில், பொது வினியோக திட்ட இணையதளத்தில் சென்று, ஏற்கனவே பெயர் உள்ள கார்டில் இருந்து, தன் பெயரை நீக்க வேண்டும்.
பின், அதே இணையதளத்தில், புதிய கார்டு விண்ணப்ப பகுதிக்கு சென்று, சுய விபரத்தை பதிவிட்டு, ‘ஆதார்’ எண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதை, அதிகாரிகள் பரிசீலித்து, ஸ்மார்ட் கார்டு வழங்க பரிந்துரைப்பர். மேற்கண்ட சேவைகளை, அரசு இ – சேவை மையத்தில், கட்டணம் செலுத்தி பெறலாம். ஆனால், அங்குள்ள ஊழியர்களின் அலட்சியத்தால், ரேஷன் கார்டு விண்ணப்பம் குறித்த விபரம், மக்களை முழுமையாக சென்றடையவில்லை.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் செய்யப்படும். புதிய ரேஷன் கார்டு பெற, யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். அரசு பள்ளி மாணவர்களுக்கு, மடி கணினி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் உதவியுடன், ரேஷன் கடைகளில் ஒட்டியுள்ள விளம்பரத்தை பார்த்து, புது கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.