விசா மறுப்பின் பின்னணியில் இலங்கை அரசு’: வைகோ
விசா மறுப்பின் பின்னணியில் இலங்கை அரசு இருப்பதாக ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்.
மலேசியாவில் நுழைய தடை விதிப்பால், ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ மலேசியாவிலிருந்து சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:
கைதி போல்..
மலேசியாவில் நடைபெறும் பினாங்கு துணை முதல்வர் இல்ல திருமண விழாவுக்காக சென்றிருந்தேன். மலேசிய விமான நிலையத்தில் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மலேசிய போலீஸ் என்னை கைதி போல் நடத்தினர். 16 மணி நேரமாக ஒரே இடத்தில் அமர்ந்திருந்தேன். 24 மணி நேரமாக உணவு உண்ணவில்லை. பினாங்கு துணை முதல்வர் இந்த விஷயத்தில் தலையிட்டும், நான் முன்னாள் எம்.பி., என்பதற்கான சான்றினை காட்டிய போதும், மலேசிய போலீசார் என்னை விடுவிக்கவில்லை.
பின்னணியில் இலங்கை:
இலங்கை அரசின் அழுத்தத்தினால் தான் மலேசியாவில் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 2009ல் இலங்கை அரசை கடுமையாக விமர்சித்திருந்தேன். புலிகள் ஆதரவு குரல் எங்கும் எழக் கூடாது என இலங்கை அரசு நினைக்கிறது. இச்சம்பவத்திற்காக மலேசியாவில் உள்ள இந்திய தூதர் கவலை தெரிவித்தார். எனக்கு ஆதரவளித்த ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன், வாசனுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.