
ஸ்ரீவைகுண்டம் அருகே ஓ.பி.எஸ் அணி நிர்வாகி கார் ஏற்றிக் கொலை
தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் மகன் நல்லகண்ணு (50). இவர் ஓ.பி.எஸ் அணியின் ஒன்றிய செயலாளராக உள்ளார். மேலும் இவர் சொந்தமாக வாழைத்தோட்டம் வைத்துள்ளார். இந்நிலையில் இன்று காலை நல்லக்கண்ணு ஸ்ரீவைகுண்டம் – சுப்பிரமணியபுரம் ரோட்டில் வந்தபோது அவரை மர்ம நபர் கார் ஏற்றி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவலறிந்து ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன், காவல் ஆய்வாளர் ரமேஷ் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில்,
நல்லக்கண்ணுவுக்கும் அதே ஊரைச் சேர்ந்த சங்கர் கணேஷ் என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் காரணமாக பகை இருந்துள்ளது. இதில், சங்கர் கணேஷ் மனைவி பார்வதி ஆதிச்சநல்லூர் பஞ்சாயத்து தலைவியாக உள்ளார். இந்நிலையில், இன்று காலை காரில் சங்கர் கணேஷ் வந்து கொண்டிருந்தபோது, நல்லக்கண்ணு அவரை வழிமறித்து அரிவாளால் வெட்ட முயன்றதாக தகவல் சொல்லப்படுகிறது. இதனால் சங்கர் கணேஷ், நல்லக்கண்ணுவை கார் ஏற்றி கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப் பதிந்து, சங்கர் கணேஷை தேடி வருகின்றனர். இந்த கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது.
செய்தி – திருச்செந்தூர் சதீஷ்