Breaking News
புனிதமான மருத்துவ தொழிலை கொச்சைப்படுத்த வேண்டாம்: இந்திய மருத்துவ கவுன்சில்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு 30-க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் கொண்டு முறையான உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு நிலையில், தவறு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் புனிதமான மருத்துவ தொழிலை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து இன்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், மருத்துவ கவுன்சிலின் தமிழக தலைவர் டாக்டர் டி.என். ரவிசங்கர் உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், எந்தவொரு நோயாளியையும் காப்பாற்றவே சிகிச்சை அளிக்கப்படுகிறது. மோசமான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட ஜெயலலிதாவின் உயிரைக்காக்க உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், 30-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் 75 நாட்களாக போராடி அளித்த சிகிச்சையில் உடல் நலம் தேறி வந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு டிசம்பர் 4-ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதில், அவருக்கு அளிக்கப்பட சிகிச்சையில் தவறுகள் ஏற்பட்டிருக்கவே வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவத்திற்கும், அரசியலுக்கும் சம்பந்தமே கிடையாது. லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை குறித்து ஏற்கெனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

நோயாளியை குணப்படுத்தி அனுப்பி வைக்க வேண்டும் என்பதே மருத்துவர்களின் கடமையாகும். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் கொச்சைப்படுத்தப்படுகின்றன. சிகிச்சையின் ரகசியம் காக்கப்பட வேண்டும். ஜெயலலிதாவிற்கு பணிச்சுமை காரணமாக மனஅழுத்தம் ஏற்பட்டிருக்கக்கூடும் என்றும் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளித்தும் அவர் உயிரிழந்தது நமக்கு துரதிஷ்டவசம் என்றுதான் கூற வேண்டும் என்றார் டாக்டர். பாலசுப்பிரமணியம்.

மேலும் யாரையும் பார்க்க விடாதது ஏன் என்பது பற்றியோ, சிசிடிவி கேமரா இல்லை என்பது பற்றியோ தங்களால் விளக்கம் தரமுடியாது என்றும் அரசியல் பிரச்சினையில் மருத்துவர்களின் சிகிச்சையை குறை சொல்லக்கூடாது என்பதற்காகவே இந்த விளக்கத்தை அளித்துள்ளோம்.

நோயாளிக்கு என்ன விதமான சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்டாலும், அதற்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.