Breaking News

கடந்த சில நாட்களாக ‘ட்ரக்கியோஸ்டோமி’ என்ற சொல் பரவலாக அடிபடுகிறது. ஜெயலலிதாவுக்கு இந்த சிகிச்சை கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஊடகங்களில் கவனம் பெறத்தொடங்கியது இந்த சொல். தற்போது, கருணாநிதிக்கும் இதே சிகிச்சை செய்துள்ளதாகச் சொல்கிறார்கள். உண்மையில் எம்.ஜி.ஆரோடு சேர்த்து இதுவரை மூன்று முதல்வர்களுக்கும், பல சினிமா பிரபலங்களுக்கும் இந்த சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ட்ரக்கியோஸ்டோமி என்றால் என்ன? எதற்காக இந்த சிகிச்சை செய்யப்படுகிறது? யாருக்கு இந்த சிகிச்சை தேவைப்படும் என்று பார்ப்போம்.


ட்ரக்கியோஸ்டோமி (Tracheostomy) என்பது ஒரு அறுவைசிகிச்சை முறையாகும். மூச்சுக்குழலில், நுரையீரலில் தொற்று ஏற்படும்போது, சுவாசிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், தொண்டைக்குக் கீழ்புறக் கழுத்துப் பகுதியில் துளையிட்டு ஒரு செயற்கைக் குழாய் மூலம் உடல் உறுப்புகளுக்குத் தேவையான ஆக்சிஜன் உள் செலுத்தப்படும். இதையே ட்ரக்கியோஸ்டோமி என்கிறோம்.

ட்ரக்கியோஸ்டோமி

இந்த சிகிச்சைமுறையில் கழுத்து வழியாக உள் செலுத்தப்படும் குழாயானது நுரையீரல் பைகளில் உள்ள அடைப்புகளை நீக்கி, நுரையீரலுக்குள் சுவாசம் சீராகச் செல்ல உதவுகிறது. இந்த முறையில் தொண்டையின் கீழ்புறம் துளையிட்டு, அந்தத் துளையின் வழியாக, மூச்சுக்குழலுடன் செயற்கைக் குழாய் இணைக்கப்படுகிறது. இந்த டியூப் உள் மற்றும் வெளிப் புறமும் இருக்கும். முற்றிலுமாகக் குணமடைந்த பிறகே உள்ளே செலுத்தப்படும் குழாய் வெளியே எடுக்கப்படும். இந்த சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் குழாய்க்கு ‘ட்ரக் டியூப்’ அல்லது ‘ட்ரக்கியோஸ்டோமி டியூஃப்’ (Trach Tube or Tracheostomy Tube ) என்று பெயர்.

இது போன்ற சுவாசக்கோளாறு பிரச்னை, ஒவ்வாமையின் காரணமாக ஏற்படுகிறது. பொதுவாக, ஒவ்வாமையானது தோல் மற்றும் நுரையீரலைப் பாதிக்கும். சிலருக்கு, அலர்ஜி, வீக்கம், ஒவ்வாமை போன்றவற்றுக்கான இம்யூனோமாடுலேட்டர் மருந்துகளை எடுத்துக்கொள்வதாலும் சுவாசக்கோளாறு ஏற்படும். டாக்டர் பரிந்துரைக்காமல் சுயமாக, அதிக அளவில் எடுத்துகொள்ளக் கூடாது.

இம்யூனோமாடுலேட்டர் (Immunomodulator)

நம் உடலின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிப்பதற்காக இம்யூனோமாடுலேட்டர் மருந்து தரப்படுகிறது. கால்சி நியூரின் (Calcineurin), ஆன்டிமெட்டாபாலிட்ஸ்(Antimetabolites) ஆல்கைலேடிங்(Alkylating), ஸ்டெராய்டுகள் (Steroids), அனபோலிக் ஸ்டெராய்டுகள் (Anabolic Steroids), மெத்தோட்ரெக்ஸேட் (Methotrexate), இம்யூனோக்ளோபுலின் ஏ (Immunoglobulin A) , இம்யூனோக்ளோபுலின் ஜி (Immunoglobulin G) போன்றவற்றை இம்யூனோமாடுலேட்டர் என்கிறோம்.

இம்யூனோமாடுலேட்டர்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தைச் சீர்படுத்த உதவுகின்றன. மேலும், இது நோய் எதிர்ப்பு மண்டலத்தைக் கட்டுப்படுத்தவும் செய்கிறது. இந்த மருந்துகள், நம்மை மிகவும் சுறுசுறுப்பாகவும், முதுமையின்மையாகவும் வைத்திருக்க உதவுகின்றன. மேலும், புற்றுநோய் சிகிச்சைகளில் உடலுக்குப் புத்துணர்வு அளிப்பதற்காகவும், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போரிடுவதற்காகவும் இம்யூனோமாடுலேட்டர் மருந்துகள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ஆனால், மருத்துவர் பரிந்துரையின்படி அளவுடன் எடுப்பது அவசியம்.

இது போன்ற இம்யூனோமாடுலேட்டர் மருந்துகளைப் பெரும் பதவியில் இருப்பவர்கள், திரைத்துறையினர், விளையாட்டுத் துறையில் உள்ளவர்கள் அதிகப் புத்துணர்வு பெறுவதற்காக எடுத்துக்கொள்கின்றனர். இவற்றின் விலை சற்று அதிகம். இப்படி எடுத்துக்கொள்வதாலும் சில பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, இந்த இம்யூனோமாடுலேட்டர் மருந்துகள், உடலில் உள்ள துணை செல்களை அதிக உணர்திறன் (Hypersensitivity) மிக்கவைகளாக மாற்றுகின்றன. மேலும், சிலருக்கு இண்டர்லியூக்கின்களில் (Interleukins) பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இண்டர்லியூக்கின்கள் (Interleukins)

உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தில் இண்டர்லியூக்கின்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இண்டர்லியூக்கின்கள், நோய் எதிர்ப்பு செல்களுக்குத் தேவையான புரதம் மற்றும் திசுக்களின் மூலக்கூறுகளை கொண்டுள்ளது. மேலும், இவை செல்களின் வளர்ச்சி, வகைப்படுத்துதல் மற்றும் இயக்கத்துக்கு உதவுகின்றன. குறிப்பாக, உடலில் வீக்கங்கள் ஏற்படும்போது, நோய் எதிர்ப்பு செல்களைத் தூண்டுகின்றன. இம்யூனோமாடுலேட்டர்களை அதிகமாகப் பயன்படுத்தும்போது இந்த இண்டர்லியூக்கின்கள் பாதிப்படைகின்றன. இதனால் கீழ்கண்ட பக்கவிளைவுகள் ஏற்படும்.

பக்க விளைவுகள்:

சுவாசப்பையைப் பாதிக்கும்.

உடலின் எதிர்ப்பு சக்தி குறையும்.

எளிதில் நோய்த் தொற்றை உண்டாக்கும்.

ஒவ்வாமையை அதிகரிக்கும்.

கடுமையான காய்ச்சலை உருவாக்கும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.