Breaking News
இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு இரட்டை விருது

ஆண்டின் சிறந்த வீரர்–சிறந்த டெஸ்ட் வீரர்: இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு இரட்டை விருது ஒரு நாள் போட்டி கனவு அணிக்கு கோலி கேப்டன்

ஐ.சி.சி.யின் ஆண்டின் சிறந்த வீரர், சிறந்த டெஸ்ட் வீரர் விருதுக்கு இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தேர்வாகியுள்ளார்.

அஸ்வினுக்கு ஐ.சி.சி. விருது
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் ஆண்டுதோறும் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு கவுரவிக்கப்பட்டு வருகிறார்கள். இதன்படி இந்த ஆண்டுக்கான விருதுக்கு 2015–ம் ஆண்டு செப்டம்பர் 14–ந்தேதி முதல் 2016–ம் ஆண்டு செப்டம்பர் 20–ந்தேதி வரையிலான காலக்கட்டத்தில் வீரர்களின் செயல்பாடு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த காலக்கட்டத்தில் அசத்திய சிறந்த வீரர்கள், ஓட்டெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டனர். டெஸ்ட் விளையாடும் 10 நாடுகளை சேர்ந்த குறிப்பிட்ட ஊடகத்தினர் மற்றும் ஐ.சி.சி. உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்றனர்.

இதன்படி இந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான ‘சர் கேர்பீல்டு சோபர்ஸ்’ விருதுக்கு இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஐ.சி.சி.யின் மிக உயரிய விருதான இதை பெறும் 12–வது வீரர், இந்திய அளவில் 3–வது வீரர் ஆகிய சிறப்புகளை அஸ்வின் பெறுகிறார்.

ஏற்கனவே இந்தியாவின் ராகுல் டிராவிட் (2004–ம் ஆண்டு), இங்கிலாந்தின் ஆன்ட்ரூ பிளின்டாப், தென்ஆப்பிரிக்காவின் காலிஸ் (கூட்டாக 2005), ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங் (2006, 2007), வெஸ்ட் இண்டீசின் சந்தர்பால் (2008), ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஜான்சன் (2009, 2014), இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் (2010), இங்கிலாந்தின் ஜோனதன் டிராட் (2011), இலங்கையின் சங்கக்கரா (2012), ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க் (2013), ஸ்டீவன் சுமித்(2015) ஆகியோர் இந்த விருதுகளை பெற்றுள்ளனர்.

சிறந்த டெஸ்ட் வீரராகவும்…
விருதுக்குரிய காலக்கட்டத்தில் அஸ்வின் 8 டெஸ்டில் விளையாடி 48 விக்கெட்டுகளும், 2 சதம் உள்பட 336 ரன்களும் எடுத்து ஆல்–ரவுண்டராக ஜொலித்தார். 19 ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 27 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இது தவிர, 2015–ம் ஆண்டின் இறுதியில் ‘நம்பர் ஒன்’ இடத்தை பெற்றதுடன், தற்போதும் டெஸ்டில் ‘நம்பர் ஒன்’ பவுலராக வலம் வருகிறார்.

அத்துடன் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதையும் அஸ்வின் தட்டிச் சென்றுள்ளார். இதன் மூலம் ஒரே ஆண்டில் இரட்டை விருதை உச்சிமுகரும் 2–வது இந்தியர் (இதற்கு முன்பு 2004–ம் ஆண்டில் டிராவிட் பெற்றிருந்தார்) என்ற மகிமையும் அஸ்வினுக்கு கிடைத்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்த 30 வயதான அஸ்வின் கூறுகையில், ‘ஐ.சி.சி.யிடம் இருந்து கிடைத்த இந்த அங்கீகாரத்தின் மூலம் எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைக்கிறேன். ஏதாவது ஒரு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இரட்டை விருது கிடைத்திருப்பது மிகவும் சிறப்புக்குரியது. அதுவும் சச்சின் தெண்டுல்கர், ராகுல் டிராவிட் போன்றோர் வழியில் ஆண்டின் சிறந்த வீரர் விருதை பெறுவது மிகப்பெரிய கவுரவமாகும்.

குடும்பத்தினருக்கு சமர்ப்பிப்பு
கடந்த இரண்டு ஆண்டுகள், எனக்கு சிறப்பான வகையில் அமைந்திருக்கிறது. அதிலும் இந்த ஆண்டை மேலும் சிறப்பு வாய்ந்தது என்று சொல்லலாம். களத்தில் நான் சாதிக்கிறேன் என்றால், எனது வெற்றிக்கு பின்னால் குறிப்பிட்ட சிலர் இருக்கிறார்கள். பக்கபலமாக இருக்கும் எனது குடும்பத்தினருக்கு இந்த விருதை சமர்ப்பிக்க விரும்புகிறேன். இந்த சமயத்தில் அணியின் சக வீரர்களையும் மறந்து விட முடியாது. இதே போல் பயிற்சியாளர் அனில் கும்பிளே, எனது முழு திறமையை வெளிக்கொண்டு வருவதில் வழிகாட்டியாக இருக்கிறார். அவருக்கும் எனது நன்றி’ என்றார்.

சிறந்த ஒரு நாள் போட்டி வீரராக தென்ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் தேர்வானார். விருதுக்குரிய காலத்தில் அவர் 16 ஒரு நாள் போட்டிகளில் களம் இறங்கி 4 சதம் உள்பட 793 ரன்கள் சேர்த்துள்ளார். டிவில்லியர்சுக்கு பிறகு இந்த விருதை பெறும் தென்ஆப்பிரிக்க வீரர் டி காக் தான்.

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் சிறந்த செயல்பாட்டுக்குரிய விருதை வெஸ்ட் இண்டீஸ் ஆல்–ரவுண்டர் கார்லஸ் பிராத்வெய்ட் பெறுகிறார். 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில், கொல்கத்தாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் கடைசி ஓவரில் 24 ரன்கள் தேவைப்பட்ட போது, பிராத்வெய்ட் தொடர்ந்து 4 சிக்சர் விளாசி ரசிகர்களை சிலிர்க்க வைத்தார். மொத்தம் 10 பந்துகளில் 34 ரன்கள் திரட்டி வெற்றிக்கு வித்திட்டார். இந்த விருதை பெறும் முதல் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் பிராத்வெய்ட் ஆவார்.

கனவு அணிகள்
ஐ.சி.சி. சார்பில் கனவு அணியும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. இந்திய கேப்டன் விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி தொடர்ச்சியாக 18 டெஸ்டுகளில் தோல்வியே சந்திக்காமல் வீறு நடை போடலாம். ஆனால் ஐ.சி.சி.யின் கனவு டெஸ்ட் அணியில் விராட் கோலி புறக்கணிக்கப்பட்டு உள்ளார். டெஸ்ட் அணியில் இந்தியர்களில் அஸ்வின் மட்டுமே இடம் பிடித்துள்ளார். பாகிஸ்தான் வீரர்கள் யாருக்கும் இடம் கிடைக்கவில்லை. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக 4 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

2016–ம் ஆண்டுக்கான ஐ.சி.சி. கனவு டெஸ்ட் அணி: அலஸ்டயர் குக் (கேப்டன், இங்கிலாந்து), டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), கனே வில்லியம்சன் (நியூசிலாந்து), ஜோ ரூட் (இங்கிலாந்து), ஆடம் வோக்ஸ் (ஆஸ்திரேலியா), ஜானி பேர்ஸ்டோ (இங்கிலாந்து), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), அஸ்வின் (இந்தியா), ஹெராத் (இலங்கை), மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா), ஸ்டெயின் (தென்ஆப்பிரிக்கா), 12–வது வீரர்: ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா).

கோலிக்கு கேப்டன்
ஒரு நாள் போட்டி கனவு அணியின் கேப்டனாக இந்தியாவின் விராட் கோலி தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகிய இந்தியர்களும் இதில் அங்கம் வகிக்கிறா£ர்கள்.

2016–ம் ஆண்டுக்கான ஐ.சி.சி. ஒரு நாள் போட்டி அணி வருமாறு:–

விராட் கோலி (கேப்டன், இந்தியா), டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), குயின்டான் டி காக் (தென்ஆப்பிரிக்கா), ரோகித் சர்மா (இந்தியா), டிவில்லியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா), ஜோஸ்பட்லர் (இங்கிலாந்து), மிட்செல் மார்ஷ் (ஆஸ்திரேலியா), ரவீந்திர ஜடேஜா (இந்தியா), மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா), காஜிசோ ரபடா (தென்ஆப்பிரிக்கா), சுனில் நரின் (வெஸ்ட் இண்டீஸ்), 12–வது வீரர்: இம்ரான் தாஹிர் (தென்ஆப்பிரிக்கா).

இதே போல் ஸ்டெபானி டெய்லர் (வெஸ்ட் இண்டீஸ்) தலைமையிலான பெண்கள் கனவு அணியில் இந்தியர்களில் ஸ்மிர்தி மந்தனாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிட்டியுள்ளது. வேறு எந்த ஆசிய நாட்டவருக்கும் இடம் கிடைக்கவில்லை.

ஐ.சி.சி. விருது பெறுபவர்கள் விவரம்

ஆண்டின் சிறந்த வீரர்– அஸ்வின் (இந்தியா)

ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர்– அஸ்வின் (இந்தியா)

ஆண்டின் சிறந்த ஒரு நாள் போட்டி வீரர்– குயின்டான் டி காக் (தென்ஆப்பிரிக்கா)

20 ஓவர் கிரிக்கெட்டில் சிறந்த செயல்பாடு– கார்லஸ் பிராத்வெய்ட் (வெஸ்ட் இண்டீஸ்)

வளரும் வீரருக்கான விருது– முஷ்தாபிஜூர் ரகுமான் (வங்காளதேசம்)

உறுப்பு நாடுகளில் சிறந்த வீரர்– முகமது ஷாசாத் (ஆப்கானிஸ்தான்)

கிரிக்கெட் உத்வேக விருது– மிஸ்பா உல்–ஹக் (பாகிஸ்தான்)

ஆண்டின் சிறந்த ஒரு நாள் போட்டி வீராங்கனை– சுசி பேட்ஸ் (நியூசிலாந்து)

சிறந்த 20 ஓவர் போட்டி வீராங்கனை விருது– சுசி பேட்ஸ் (நியூசிலாந்து)

சிறந்த நடுவருக்கான விருது– மரைஸ் எராஸ்மஸ் (தென்ஆப்பிரிக்கா)

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.