சாத்தான்குளம் அருகே குளத்தில் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு சாகசம் – 2 யூடியூபர் கைது மற்றொருவருக்கு போலீஸ் வலைவீச்சு- மாவட்ட எஸ்பி எச்சரிக்கை

சாத்தான்குளம் அருகே குளத்தில் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு சாகசம் – 2 யூடியூபர் கைது மற்றொருவருக்கு போலீஸ் வலைவீச்சு- மாவட்ட எஸ்பி எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள குளத்தில் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு அதில் குதித்து சாகசம் செய்து வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட 2 பேர் கைது – சாகசம் செய்தல், வாகனங்களில் வீலிங் செய்தல், உண்மைக்குப் புறம்பான, சட்டவிரோதமான செய்திகளை சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பகுதியில், ஒருவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அங்குள்ள குளத்தில் பெட்ரோல் ஊற்றி அதில் தீயிட்டு அதன்மீது குதித்து சாகசம் செய்து, அதை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் கென்னடி உரிய விசாரணை மேற்கொண்டு தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ஏசுராஜசேகரன் தலைமையில், உதவி ஆய்வாளர் பொன் முனியசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தட்டார்மடம் வாழத்தூர் பகுதியை சேர்ந்தவர்களான பாஸ்கர் மகன் பாலகிருஷ்ணன் (எ) ரஞ்சித் பாலா (23), முருகன் மகன் சிவக்குமார் (19) மற்றும் வீரபுத்திரன் மகன் இசக்கிராஜா (19) ஆகியோர் சேர்ந்து மேற்படி சாகசம் செய்து வீடியோ எடுத்து அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தது தெரியவந்தது.

இதயைடுத்து போலீசார் பாலகிருஷ்ணன் (எ) ரஞ்சித் பாலா மற்றும் சிவக்குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து தட்டார்மடம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு மற்றொருவரை தேடி வருகின்றனர்.

இதுபோன்று தேவையில்லாமல் சாகசம் செய்து சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலோ, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலோ, அல்லது உண்மைக்கு புறம்பான செய்திகள், புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவற்றை சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் மற்றும் வாகனங்களில் வீலிங் செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )