
திறந்த வெளியில் வடை விற்பனை செய்த டீக்கடை மற்றும் உரிமம் இல்லாமல் செயல்பட்ட மீன் பதனிடும் தொழிற்சாலைக்கு சீல் – தூத்துக்குடி உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை
தூத்துக்குடி புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் செயல்பட்ட ஹைவேநெஸ்ட் மினி மூடப்பட்டது. மேலும் கீழஅரசடியில் உணவு பாதுகாப்பு உரிமமின்றி செயல்பட்ட மீன் பதனிடும் தொழிற்சாலையின் இயக்கமும் நிறுத்தம் செய்து நியமன அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, உணவுப் பாதுகாப்பு ஆணையர் லால்வேணா, மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி ஆகியோரின் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதலின் பேரில் தூத்துக்குடி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் நியமன அலுவலர் டாக்டர்.ச.மாரியப்பன் திடீர் ஆய்வாக, தூத்துக்குடி புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் உள்ள ஹைவேநெஸ்ட் மினி கடையில் இன்று (20.02.2024 ) ஆய்வு மேற்கொண்டார். அப்போது, திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த 1 கிலோ வடை உள்ளிட்ட தீனிகளும், வடை பரிமாற வைத்திருந்த 1/2 கிலோ அச்சிட்ட காகிதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், உணவு பாதுகாப்பு உரிமம் அந்த கடைக்கு இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டு, அக்கடையின் இயக்கத்தினை நிறுத்தி வைத்து உடனடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனடிப்படையில், அக்கடையானது உடனடியாக மூடப்பட்டது.
முன்னதாக, ஜெபராஜ் என்பவருக்குச் சொந்தமான மெஸ்ஸய்யா ஸ்ரீஷ் என்ற நிறுவனம் உணவுப் பாதுகாப்பு உரிமம் பெறாமல், கடந்த இரண்டு மாதங்களாக உணவு வணிகம் கண்டறியப்பட்டது, அதன் இயக்கமும் நிறுத்தப்பட்டது.
அனைத்து வகையான உணவு வணிகர்களும், https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, உணவு பாதுகாப்பு உரிமம்/பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும். உணவு பாதுகாப்பு உரிமம்/பதிவுச் சான்றிதழ் இல்லாமல் தொழில்புரிவது கண்டறியப்பட்டால், அக்கடை அல்லது நிறுவனத்திற்கு எந்த வாய்ப்பும் வழங்கப்படாமல் உடனடியாக மூடப்படும் என்று திட்டவட்டமாக அறிவிக்கப்படுகிறது.
மேலும், எக்காரணம் கொண்டும் நியூஸ் பேப்பர் உள்ளிட்ட அச்சிட்ட காகிதங்கள் அல்லது அனுமதியற்ற பிளாஸ்டிக்குகளை உணவுப் பொருட்களைப் பொட்டலமிட/விநியோகிக்கப் பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவிக்கப்படுகிறது.
மேலும், இது தொடர்பான புகார்கள் ஏதும் நுகர்வோருக்கு இருப்பின், 9444042322 என்ற மாநில உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலகக் கட்செவி எண்ணிற்கோ அல்லது உணவுப் பாதுகாப்புத் துறையின் TN Food Safety என்ற புகார் செயலி மூலமாகவோ அல்லது https://foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரது ரகசியங்கள் காக்கப்படும்.
உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்ட நெறிமுறைகளை வணிகர்கள் பின்பற்ற தவறினால், மேற்கூறிய சட்டத்தின் கீழ் பறிமுதல், வியாபாரம் நிறுத்தம், நியமன அலுவலர் அல்லது மாவட்ட வருவாய் அதிகாரி அல்லது நீதிமன்றத்தில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் உள்ளாக நேரிடும் என்றும் கடுமையாக அதிகாரி எச்சரிக்கப்படுகிறது என தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மாரியப்பன் தெரிவித்தார்.