ரூ.62.00 கோடி திட்ட மதிப்பிட்டில் 49 மீனவ கிராமங்களில் மொத்தம் 200 இடங்களில் செயற்கைப் பவளப்பாறைகள் – அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தகவல்

ரூ.62.00 கோடி திட்ட மதிப்பிட்டில் 49 மீனவ கிராமங்களில் மொத்தம் 200 இடங்களில் செயற்கைப் பவளப்பாறைகள் – அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தகவல்

49 மீனவ கிராமங்களில் மொத்தம் 200 இடங்களில் செயற்கைப் பவளப்பாறைகள் நிறுவ ரூ.62.00 கோடி திட்ட மதிப்பிட்டில் தமிழ்நாடு அரசால் நிர்வாக ஒப்புதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பேசினார்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஐந்து மீனவக்கிராமங்களில் 36 இடங்களில் ரூ.11.30 கோடிமதிப்பீட்டில் செயற்கைப் பவளப்பாறைகள் அமைக்கும் பணியில் முதற்கட்டமாக தருவைகுளத்திலிருந்து கடல்மார்க்கமாக சிங்கித்துறை மீனவக்கிராமத்திற்கு செயற்கைப் பவளப்பாறைகளை கொண்டு செல்லும் பணியினை துவக்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை தலைமைப் பொறியாளர் ராஜூ தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், சண்முகையா எம்.எல்.ஏ, மீன்வளம் மீனவா்நலத்துறை இணை இயக்குநர் கூடுதல் பொறுப்பு காசிநாதபாண்டியன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடைபராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து  தொடங்கி வைத்து  பேசுகையில்

முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து தரப்பினரும் சமச்சீராக வளர்ச்சி அடைய வேண்டும் என்றும் மீனவர்களின் நலனைக் காப்பதற்காக மீன்வளத்துறை என்று இருந்த பெயரை மீன்வளம் – மீனவர் நலத்துறை என்று பெயரை மாற்றினார். இதுவரை எந்த முதலமைச்சரும் செய்யாத வகையில் இராமநாதபுரத்தில் மீனவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக மீனவர் நலமாநாடு நடத்தியவர். அந்த மாநாட்டில் மீனவர்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்தார் மீன்பிடி தடைக்கால நிவாரணம் பெறும் வயது வரம்பு 60 வயது என்று இருந்ததை மாற்றி மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கும் காலம் வரை மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5000 இருந்தை ரூ.8,000-ஆக உயர்த்தி அறிவித்தார்கள். மீனவர்கள் வளர்ச்சி பெற தூண்டில் வளைவு உள்ளிட்ட அத்தனை தேவைகளையும்  நிறைவேற்றி 5 வருடகாலத்தில் மீனவர்களுக்கு எந்தவித குறையும் இல்லாத வகையில் செயல்பட உத்தரவிட்டுள்ளார்
கனிமொழி எம்.பி  மீனவர்களின் வளர்ச்சியில் அதிக அக்கறை உள்ளவர். மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கக்கூடிய கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம், நகர்ப்புற அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் திட்டம், பெண்களை பாரதிகண்ட புதுமைப் பெண்களாக மாற்ற அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் கல்லூரி படிப்பதற்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை தந்துள்ளார்கள்.  மேலும், சட்டமன்றக் கூட்டத்தொடரில் ரூ.350 கோடியில் உங்கள் பகுதியில் மீன்பிடிதுறைமுகம் அமைக்கும் பணிகளை செய்வதற்கு உத்தரவு வழங்கியிருக்கிறார்கள். மழைக்காலத்தில் படகு சேதமடைந்தவர்களுக்கு இழப்பீடு உள்ளிட்டவைகளை வழங்கினார். அந்த வகையில் தமிழ்நாட்டில் மீன்வளத்தை மேலும் பெருக்கும் பொருட்டு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் கடலோர மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய ஆறு மாவட்டங்களில், 49 மீனவ கிராமங்களில் மொத்தம் 200 இடங்களில் செயற்கைப் பவளப்பாறைகள் நிறுவ ரூ.62.00 கோடி திட்ட மதிப்பிட்டில் தமிழ்நாடு அரசால் நிர்வாக ஒப்புதல் ஆணை வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிங்கித்துறை, கொம்புத்துறை, ஆலந்தலை, புன்னக்காயல் மற்றும் மணப்பாடு ஆகிய ஐந்து மீனவக் கிராமங்களில் 36 இடங்களில் தலா 190 செயற்கைப் பவளப்பாறைகள் ரூ.11.30 கோடி அமைக்கும் பணியில் முதற்கட்டமாக தருவைகுளத்திலிருந்து கடல்மார்க்கமாக சிங்கித்துறை மீனவக் கிராமத்திற்கு செயற்கைப் பவளப்பாறைகளை கொண்டு செல்லும் பணியினை தொடங்கி வைத்துள்ளோம்.
முதற்கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தில் சிங்கித்துறை மீனவக் கிராமத்தில் ஆறு இடங்களில் செயற்கைப்பவளப்பாறை அமைக்கும் பணி தருவைக்குளம் மீன் இறங்கு தளத்தில் துவக்கிவைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் 31.03.2024-க்குள் செயற்கை பவளப்பாறைகள் அமைக்கப்படும். இந்த திட்டத்தால் பளைப்பாறைகளில் மீன்குஞ்சுகள் அதிக அளவில் உற்பத்தியாகி மீன்வளம் பெருகும். கடல் மீன் உற்பத்தி அதிகரிக்கும் மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ரமேஷ், உதவிப்பொறியாளர் (மீன்வளம்) தயாநிதி, மாநில வா்த்தக அணி இணைச்செயலாளர் உமாிசங்கா், தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், ஒன்றிய செயலாளர் இளையராஜா, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வகுமார், செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் முத்துக்குமார், பங்குதந்தை வின்சென்ட், மற்றும் அரசு அலுவலர்கள், மீனவர்கள் பலர் கலந்து கொண்டனர். மீன்வளம் உதவி இயக்குநர் புஷ்ரா ஷப்னம் நன்றி கூறினார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )