
தூத்துக்குடி பேருந்து நிறுத்தம் அருகே பெண் சரமாரியாக வெட்டிக் கொலை- பரபரப்பு
தூத்துக்குடியில் இன்று (19/03/2024) அதிகாலை பணிக்கு சென்ற மாநகராட்சி தூய்மை பணியாளர் கனகா என்பவர் பேருந்தை விட்டு இறங்கும்போது வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிய நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாநகரில் பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தூத்துக்குடி மாவட்டம் பழையகாயலில் உள்ள மஞ்சள் நீர் காயல் பகுதியை சேர்ந்தவர் கனகா. இவர் தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கனகாவின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட தனது 3 குழந்தைகளுடன் கனகா மஞ்சள்நீர் காயலில் வசித்து வருகிறார். மேல் அங்கிருந்து தூத்துக்குடிக்கு தினமும் பேருந்து மூலம் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், கனகாவிற்கும் பசுவந்தனை சேர்ந்த ஒருவருக்கும் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை தனியார் பேருந்து மூலம் மஞ்சள்நீர் காயலில் இருந்து, தூத்துக்குடிக்கு வேலைக்கு வந்த கனகா தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் உள்ள அன்னம்மாள் கல்வியியல் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளார். அப்போது மறைந்திருந்த நபர் தனது கையில் வைத்திருந்த அரிவாளால் கொடூரமாக கனகாவின் கழுத்தில் வெட்டிவிட்டு சர்வசாதாரணமாக நடந்து சென்றதாக கூறப்படுகிறது. இதில் சாலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கனகாவை அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே கனகா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுத் தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்து விட்டு தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி புதியம்புத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே பசில தினங்களுக்கு முன்பு இதேபோல பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.