
தூத்துக்குடியில் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன்களை பறித்துச் சென்ற இளஞ்சிறார் உட்பட 4 பேர் கைது – ஒருவருக்கு கை முறிவு
தூத்துக்குடி பெருமாள் புரத்தைச் சேர்ந்தவர் அப்துல்லா மகன் செய்யது சீனி முகம்மது (27). இவர் நெல்லையில் உள்ள ஜவுளிக் கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 1ஆம் தேதி வேலை முடிந்து பஸ்சில் தூத்துக்குடிக்கு வந்துள்ளார். இரவு 11.30 மணியளவில் மார்க்கெட் சிக்னல் அருகே வந்த அவரை 4பேர் கொண்ட கும்பல் கத்தியைக காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.15ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து மத்தியபாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் ராஜ் வழக்குப் பதிவு செய்தார்.
இதுபோல் தூத்துக்குடி வடக்கு ரதவீதியைச் சேர்ந்த முருகேசன் மகன் சுபிலோசன் (24) என்பவர் எட்டையபுரம் ரோட்டில் உள்ள போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். அவர் அதிகாலை 3.30 மணியளவில் பயிற்சி வகுப்பிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து கத்தியால் தாக்கி அவரிடம் இருந்த ரூ.10ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துச் சென்றுவிட்டனர்.
பின்னர் அந்த கும்பல் அதிகாலை 4 மணியளவில் சக்திவிநாயகர் புரத்தைச் சேர்ந்த சீனி பகதூர் என்ற கூர்க்காவை தாக்கி அவரிடம் இருந்த செல்போனை பறித்துச் சென்றுள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் வழக்குப் பதிந்தார்.
போலீசாரின் விசாரணையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவன் நாயர் காலனியைச் சேர்ந்த முத்துவேல் மகன் இசக்கிமுத்து என்ற தொம்மை (26), சந்தன மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஐயம் பெருமாள் மகன் சிவா (22), முனியசாமி கோவில் தெருவைச் சேர்ந்த சரவணன் மகன் சேதுராஜா (19) மற்றும் 17 வயது இளஞ்சிறார் ஆகிய 4பேரை கைது செய்தனர்.
இதில் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்று கீழே விழுந்ததில் முத்துவேல் மகன் இசக்கிமுத்து என்ற தொம்மை என்பவருக்கு கையில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து சிறையில் அடைத்தனர்.