Breaking News
உயிரை பறிக்கும் இணைய விளையாட்டு மும்பை சிறுவன் பலி

புளூ வேல் சூசைடு சேலஞ் (Blue Whale suicide challenge) எனப்படும் இணையவிளையாட்டு உலகநாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்த விளையாட்டில் முகம் தெரியாத நபர் யாரோ கொடுக்கும் டாஸ்க்குகளை (Task) விளையாட்டின் பங்கேற்பாளர்கள் தினமும் செய்ய வேண்டும்.

நள்ளிரவில் பேய் படம் பார்ப்பது, தன்னுடைய கையை தானே பிளேடுகளால் கிழித்துக்கொள்வது, மொட்டமாடி சுவர் மீது ஏறி நின்று பாடல் கேட்பது என மொத்தம் 50 நாட்களுக்கு வெவ்வேறு வகையான டாஸ்குககள் கொடுக்கப்படும்.

பங்கேற்பாளர்கள் தினமும் இந்த டாஸ்குகளை செல்பி வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவேற்ற வேண்டும். ஒவ்வொரு டாஸ்கையும் முடித்த பிறகே அடுத்த டாஸ்க் கொடுக்கப்படும்.

இந்த விபரீத விளையாட்டின் கடைசி கட்டமான 50வது நாளில் பங்கேற்பாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் படி டாஸ்க் கொடுக்கப்படும்.

இந்நிலையில், இந்த விபரீத விளையாட்டில் பங்கேற்று விளையாடிய மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்த சிறுவன் ஒருவன், போட்டியின் 50வது நாளில் 7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபரீத விளையாட்டால் இந்தியாவில் ஏற்படும் முதல் உயிரிழப்பு இதுவாகும்.

தற்கொலை செய்துகொண்ட சிறுவனின் நடவடிக்கையில் கடந்த சில நாட்களாகவே பல மாறுதல்கள் தென்பட்டதாக அவரின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் சிறுவன் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு செல்வார் என பெற்றோர்கள் எதிர்ப்பார்த்திருக்கவில்லை. தற்கொலைக்கு முந்தைய நாளில் பள்ளியை வீட்டு வீட்டுக்கு கிளம்பிய சிறுவன், தான் நாளை பள்ளி வரப்போவதில்லை என தெரிவித்ததாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்போட்டியில் விளையாடி இதுவரை உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆன்லைன் விளையாட்டை ரஷ்யாவை சேர்ந்த பிலிப் புடாகின் என்பவர் கடந்த 2013ம் ஆண்டு வடிவமைத்துள்ளார். சிறுவர்களை தற்கொலைக்கு தூண்டும் விளையாட்டை கண்டு பிடித்ததற்காக அவரை ரஷ்யா போலீசார் கடந்த ஆண்டு கைது செய்துள்ளனர். இருப்பினும் இந்த இணைய விளையாட்டை முகம் தெரியாத சில நபர்கள் தொடர்ந்து இயக்கிவருவதாக தெரிய வந்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.