Breaking News

நகரத்தார் எனப்படும் செட்டியார் இனத்தில் பிறந்து இந்திய மேல்தட்டு மக்களுக்கு மும்பையில் உணவு விடுதிகள், சென்னை மக்களுக்கு நவீன திரையரங்கம், லண்டனில் விமான ஓட்டும் பயிற்சி எடுத்து பின் தனி விமான சேவை என‌ உலகறிந்த அதிபர் தன் முழு சொத்துக்களைக் கல்விக்கு அற்பணித்த
வள்ளல் டாக்டர் இராம.அழகப்பச்செட்டியார் பிறந்த நாள் இன்று……

கடையேழு வள்ளல்களோடு முடியவில்லை தமிழக வள்ளல் சரித்திரம் அது பின்னாளிலும் பல ஏழு வள்ளல்களாக தொடர்ந்தே வந்தது…

அப்படி ஒரு வரிசையில் வந்தவர் செட்டிநாட்டு கொடவள்ளல் அழகப்ப செட்டியார்

1909ல் செட்டிநாட்டில் பிறந்த அவர் பிறப்பாலே கோடீஸ்வரர், அந்த நிலையினை இன்னும் உயர்த்தினார் 1930களில் லண்டனுக்கு படிக்க சென்ற அவர் பெரும் வியாபார அறிவோடு வந்தார்

வந்தவர் கேரள திருச்சூரில் பிரமாண்ட ஜவுளி ஆலையினை நிறுவினார், இன்னும் நாடெங்கும் உலகெங்கும் பல தொழில் செய்தார், அன்றே பைலட் உரிமம் வைத்திருந்தவர் சொந்தமாக விமான போக்குவரத்தினை 1940களிலே நடந்த்தினார்

1945களில் இந்தியாவில் இந்துஸ்தானிகளின் கல்வி நிலையம் பெருக வேண்டும், புது புது புது ஆய்வுகள் பெருக வேண்டும் என தலைவர்கள் கோரியபொழுது அள்ளி அள்ளி கொடுத்தவர் அவர்தான்

அவர் அளவு இன்னொருவர் இந்த நூற்றாண்டில் அள்ளி கொடுத்திருக்கமுடியுமா என்பது சந்தேகமே

ஆம், அந்த பட்டியலை பார்த்தால் கண்கலங்க எல்லோருமே ஒப்புகொள்வோம், அரச சொத்தை கொள்ளையடித்த அரசியல்வாதி சொத்துக்களையே பார்த்த நமக்கு ஒரு மனிதன் தன் சொத்துக்களை நாட்டுக்கு இப்படி விட்டுகொடுத்தானா என்பது பெரும் அதிசயமே

திருவாங்கூர் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கான துறையை ஏற்படுத்த 1943ஆம் ஆண்டு ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார், அதன் இன்றைய மதிப்பு பல நூறு கோடிகள்

1947ஆம் ஆண்டு நடந்த அன்னி பெசண்ட் நூற்றாண்டுவிழாக் கொண்டாட்ட விழா நடந்தது, அப்போது காரைகுடி பக்கம் ஒரு கல்லூரி வேண்டும் என சென்னை பல்கலைகழக தலைவர் கோரிக்கை வைக்க காரைக்குடியில் காந்திமாளிகையில் அழகப்பா கலைக்கல்லூரியை மூன்று நாட்களுக்குள் நிறுவினார் செட்டியார்

1953ம் ஆண்டு தனக்கு சொந்தமான 300 ஏக்கர் நிலத்தை நாட்டுக்கு கொடுத்தார், அதில்தான் Central Electro Chemical Research Institute (CECRI) ஆய்வு ஆலை அமைந்துள்ளது

செட்டிநாட்டில் தன் அரண்மனை போன்ற வீட்டை , கோட்டையூர் இல்லத்தையே ஓர் பெண்கள் கல்லூரி நிறுவ வழங்கினார்

தொடர்ந்து அவரின் கல்வி பணிகள் வளர்ந்தன‌

அவரது பிறந்த ஊரான கோட்டையூரில் ஓர் உயர்நிலைப் பள்ளி, சென்னை வேப்பேரியில் ஓர் பெண்கள் தங்கும் விடுதி

கோட்டையூர் நகரமைப்பிற்காக வளர்ச்சி நிதி, கந்தனூர் மீனாட்சி மன்றத்திற்காக நன்கொடை

சிதம்பரம் ,அண்ணாமலை பல்கலைக்கழகம் வளாகத்தில் பொறியியல் கல்லூரி துவக்கியது

கிண்டியில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பின்னர் அழகப்பா செட்டியார் தொழில்நுட்பகல்லூரி என பெயர்பெற்ற அந்த தொழில்நுட்பக் கல்லூரி துவக்கம்

மலேசியாவில் உயர்கல்வி துவங்க நன்கொடை

1948ஆம் ஆண்டு புது தில்லியில் தென்னிந்தியா கல்வி சொசைட்டி அமைக்க நன்கொடை
மதுரை லேடி டோக் கல்லூரிக்கு நன்கொடை

1946ஆம் ஆண்டு தக்கர் பாபா வித்யாலயாவில் அழகப்பா மண்டபம் கட்ட நன்கொடை
தமிழ் களஞ்சியம் பதிப்பித்திட நன்கொடை

புவியியல் ஆய்விற்காக திருவாங்கூர் அரசிற்கு நன்கொடை

கொச்சியில் குழந்தைப்பேறு மற்றும் குழந்தை வளர்ப்பு மையம் ஒன்றை நிறுவ நன்கொடை
எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் நாட்டு மருத்துவ ஆய்வினுக்காக நன்கொடை

அவர் நிறுவிய கல்விக்கூடங்களின் அடிப்படையில் தமிழக அரசு 1985ஆம் ஆண்டு அழகப்பா பல்கலைக்கழகத்தை அமைத்தது.

அந்த சிவகங்கை பகதியில் இன்று அழகப்பா பல்கலைகழகம் நிமிர்ந்து நிற்க அவர்தான் காரணம்

இப்படிபட்ட பெரும் நிதியினை பெரும் கொடைகளை அவரை தவிர யாரும் செய்திருக்க முடியாது

அவரின் வாழ்வு உருக்கமானது, வாழவேண்டிய வயதில் சுமார் 40 வயதில் அவருக்கு தொழுநோய் தாக்கிற்று

அவருக்கிருந்த செல்வத்துக்கும் வசதிக்கும் உலகில் எங்கு சென்றும் வைத்தியம் பார்த்திருக்கலாம் கொட்டி செலவழித்திருக்கலாம்

ஆனால் “நான் வாழ்வதை விட் இச்சமூகம் வாழ்வதே முக்கியம், எனக்கு இருக்கும் எஞ்சிய நாட்களில் பெரும் பணியினை செய்துவிட்டே மறைவேன்” என சொல்லி குறுகிய நாட்களில் தன் நோயுடன் போராடி இந்த மாபெரும் சாதனையினை செய்தார்

இவரின் வாழ்வினை மிகமிக உருக்கமாக உள்வாங்கிய கண்ணதாசன் அவரை நினைந்து எழுதியதுதான் “மனிதன் என்பவன் தெய்வமாகலாம்” எனும் பாடல்

“மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
வாழை போல தன்னைத் தந்து தியாகி ஆகலாம்
உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம

ஊருக்கு என்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம்
யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்
மனம் மனம் அது கோவிலாகலாம்

மனமிருந்தால் பறவைக்கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்
துணிந்து விட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
குணம் குணம் அது கோவிலாகலாம்”

ஆம், அழகப்ப செட்டிக்கு மிக அழகான வரிகளை எழுதி சென்றவன் அவனே

இன்று அவருக்கு பிறந்த நாள், நாளை நினைவு நாள்

47 வயதில் நானூறு வருடத்திற்கான சாதனையினை செய்துவைத்தவர் அவர்

இப்படியெல்லாம் தியாகிகள் வாழ்ந்தவர்கள், தன்னை உருக்கி ஒளிகொடுத்தவர்கள், வாழை போல அள்ளி அள்ளி கொடுத்தவர்கள் வாழ்ந்த தமிழகம் இது..

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.