Breaking News

குமரி. மாநில உளவுத்துறை போலீசாருக்கு சோதனை சாவடிகளில் வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி….?

அதிக அளவில் வெட்டி எடுக்கப்படும் கனிமவள கொள்ளை மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்து முதல்வருக்கு தெரிவிக்கும் வாய்ப்பை பறித்து காவல் நிலைய போலீசாருடன் கைகோர்க்கும் செயலா..? என பொதுமக்கள் கேள்வி

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு உட்பட குற்ற சம்பவங்கள் குறித்து முன்கூட்டியே மாநில முதல்வருக்கு தகவல் தெரிவிக்க தமிழகத்தில் தனி உளவு பிரிவே இயங்கி வருகிறது. குறிப்பாக ஏடிஜிபி நிலை அதிகாரி தலைமையில் இயங்கி வரும் மாநில உளவுத்துறை (SBCID – Intelligence) காவல் நிலைய பகுதிகளில் சமூக மத பிரச்சனைகள் மற்றும் கட்சியினருக்குள் ஏற்படும் மோதல்கள் மற்றும் குற்ற சம்பவங்கள் சட்ட விரோத செயல்கள் குறித்து ரகசிய தகவல்கள் நேரடியாக முதல்வருக்கு தெரிவிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வாளர் நிலை உளவுத்துறை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஒவ்வொரு காவல் நிலைய பகுதிக்கும் ஒரு போலீசாரை நியமித்து அவர்கள் மூலம் ரகசிய தகவலை பெற்று மேல் அதிகாரிக்கு தெரிவிப்பார். அவருக்கும் மேற்பட்ட அதிகாரி குறிப்பாக தமிழக உளவுத்துறை தலைமை அதிகாரி நேரடியாக முதல்வருக்கு அறிக்கை சமர்ப்பிப்பது வழக்கம். அதன் அடிப்படையில் காவல்துறை இயக்குனருக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு மாவட்ட கண்காணிப்பாளர் உஷார் படுத்தப்பட்டு காவல் நிலைய போலீசார் மூலம் குற்ற சம்பவங்கள் தடுக்க உத்தரவுகள் பிறப்பிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. சமீபத்தில் சாத்தான்குளம் காவல் நிலைய படுகொலைகள் சம்பவத்தில் உளவுத் துறை தோல்வி அடைந்ததன் காரணமாக இரு உயிர்கள் பலிவாங்கப்பட்டது. சென்னையிலும் காவல் நிலைய படுகொலை நடந்ததாக செய்தி வெளியானது. அதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர் காவல் உதவி ஆய்வாளர்கள் உட்பட பலர் தொடர்ந்து சிறையில் இருந்து வருகின்றனர். அதேபோல கனிமவள கொள்ளை தொடர்பாக நெல்லை மாவட்ட உளவுத்துறை தோல்வியின் எதிரொலியாக அடை மிதிப்பான் குளம் கல்குவாரியில் நான்கு பேர் உயிரோடு புதைந்து பல நாட்களுக்குப் பின்னர் உடலை மீட்ட சம்பவமும் தொடர்ந்து கல்குவாரி சீல் வைக்கப்பட்ட சம்பவமும் நடைபெற்றது. உளவுத்துறை உஷாராக இருந்திருந்தால் கூடுதலாக கனிம வளம் வெட்டி எடுக்கப்படும் தகவல்கள் அரசுக்கு அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் நான்கு உயிர் பலிகளை தடுத்திருக்கலாம். மேலும் தற்போது அம்பாசமுத்திரம் பகுதியில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பற்களை உடைத்த சம்பவத்திலும் உளவுத்துறை தோல்வியால் பல நாட்களுக்கு பின்னர் சம்பவம் ஊடகங்களில் வெளியாகி பூதாகரமாக அதிர்ச்சி அலைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது. காவல் நிலைய சித்திரவதைகள் நடைபெறாமல் தடுத்தால் மட்டும் தான் காவல்துறையின் மீது உள்ள களங்கம் துடைக்கப்படும். மேலும் குமரி மாவட்டத்தில் நடைபெறும் கனிமவள கொள்ளை மற்றும் குற்ற சம்பவங்கள் தொடர்பாகவும் காவல்துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்தும் உயர் அதிகாரிகளுக்கு தகவல்கள் தெரிவிப்பதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதிலும் குமரி உளவுத்துறை தோல்வி அடைத்ததன் காரணமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலேயே 5 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய டிஎஸ்பி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியது. மேலும் மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளராக இருந்த ஆய்வாளர் ஒருவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரால் அதிரடி சோதனை நடத்தப்பட்டு சுமார் ஒன்றரை கோடி ரூபாய்க்கு மேல் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கண்டுபிடிக்கப்பட்டதும் அன்றி பல்லாயிரக்கணக்கான ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்ட நிகழ்வுகளும் நடந்தது. மேலும் குமரி மாவட்டத்தில் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தால் ஒருவர் பலியான சம்பவமும் நடைபெற்றது. அந்த சம்பவம் மூடி மறைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மட்டுமின்றி குமரி மாவட்டத்தில் இருந்தும் நெல்லை மாவட்டத்தில் இருந்தும் குமரி வழியே கேரளாவுக்கு நடைபெறும் கனிமவள கடத்தல் குறித்து உயர் அதிகாரிகளுக்கு உளவுத்துறை தகவல் தெரிவிப்பதில் மெத்தனம் காட்டுவதால் கனிம வள கடத்தல் ஜரூராக நடந்து வருவதும் அது தொடர்பாக போலீசார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருவதும் தடுக்க இயலவில்லை. குறிப்பாக குறிப்பிட்ட காவல் நிலையங்களுக்கு மாதாமாதம் மாமூல் செல்வதாலும் குறிப்பிட்ட உட்கோட்ட அதிகாரிகள் முதல் மேல்பட்ட அதிகாரிகளை கனிமவள கடத்தல் கும்பல்கள் தங்கள் கைக்குள் அவர்களை வைத்து உள்ளதால் கனிம வள கடத்தல் தொடர்ந்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. சோதனைச் சாவடி போலீசார் கூட லஞ்சம் பெற்று அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனிமவள கடத்தல் லாரிகளை கேரளாவுக்கு அனுமதித்து வருகின்றனர் என்று குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்த நிலையில் அதை நிரூபிக்கும் விதமாக குமரி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை சாவடியில் திடீர் சோதனை நடத்தி பல்லாயிரக்கணக்கான கணக்கில் வராத லஞ்ச பணத்தை கைப்பற்றிய சம்பவமும் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது. சாதாரணமாக காவல் நிலையங்களில் குறிப்பிட்ட காலத்துக்கு பின் பணியிட மாற்றங்கள் செய்யப்படுவது உண்டு. காவல் பிரிவுகளிலும் அவ்வாறு நடைபெற்று வந்த நிலையில் உளவுத்துறையில் தற்போது தொடர்ந்து பணியாற்றுவதால் தானோ காவல்துறையினருடன் உளவுத்துறையினரும் ஐக்கியமாகி விட்டனரோ என்று சந்தேகம் கொள்ளும் விதத்தில் உளவு துறையின் செயல்பாடுகள் உள்ளது. ஏற்கனவே உளவுத்துறை பல்வேறு சம்பவங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில சம்பவங்களை கண்டு கொள்ளாமல் இருந்ததன் விளைவாக உளவுத்துறை சரியாக செயல்படவில்லையோ என்று ஐயம் கொள்ளும் விதத்தில் இருந்த நிலையில், உளவுத்துறையின் பணிகளை முடக்கும் விதமாக தற்போது மாநில உளவுத்துறை போலீசாரை தமிழக கேரளா எல்லைப் பகுதி சோதனை சாவடியில் வாகனங்களை கணக்கெடுக்கும் பணிக்கு ஈடுபடுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளது. மாவட்ட காவல் துறையின் கீழ் அனைவரும் லஞ்சம் வாங்கும் போலீசாராக இருந்தால் மாநில உளவுத்துறை அது குறித்து மேல் மட்டத்திற்கு தகவல் தெரிவிக்கலாம். மாவட்ட போலீசாரின் பணியை மாநில உளவுத்துறை கையிலெடுப்பது தவறானதாகும். ஆனால் மாவட்ட எஸ்பியின் கீழ் இயங்கும் தனிப்பிரிவு என்று பல தனிப்படைகள் இயங்கி வரும் நிலையில் அவர்கள் மூலம் பல்வேறு தகவல்களை பெற்று நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு ஒவ்வொரு காவல் நிலைய பகுதியிலும் ஒரு போலீசார் மாநில உளவுத்துறை சார்பாக நியமிக்கப்பட்டு இருக்க அந்த போலீசாரையே அந்தப் பகுதியிலிருந்து மாற்றி சோதனை சாவடிகளில் பணிக்கு அனுப்புவது காவல் நிலைய பகுதிகளில் நடைபெற போகும் சட்ட விரோத செயல்களுக்கு ஆதரவு கொடுப்பதாகவே அமையும் என்று சமூக ஆர்வலர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மை என்றே நினைக்கத் தோன்றுகிறது. ஆகவே குமரி மாவட்டத்தில் செயல்படும் மாநில உளவுத்துறை தங்களது பணிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு உளவுத் தகவல்களை திரட்டுவதையும் கனிம வளங்கள் அதிகமாக வெட்டி எடுக்கப்படுவதையும் கேரளாவுக்கு அதிக பாரத்துடன் கனிம வளங்கள் நடத்தப்படுவதை மும் தடுக்க உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பதோடு இதில் யார் யார் தொடர்பு வைத்து உள்ளார்கள் என்பதையும் அதிக அளவில் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டால் அதனால் அரசுக்கு ஏற்படும் இழப்புகள் குறித்தும் கேரளாவுக்கு அதிக அளவு கனிம வளங்கள் கொண்டு செல்வதை மாவட்ட போலீசார் எந்த அளவு மெத்தனப் போக்கோடு தடுக்காமல் புள்ளி விபர கணக்குக்காக வழக்கு பதிவு செய்து தொடர்ந்து கனிம வள கடத்தலை அனுமதித்து வருகின்றனர் என்பது குறித்த தகவல்களை திரட்டி கொடுப்பதை முழுமையாக செய்யாதது வரை குறிப்பாக கனிமவள கடத்தல் உட்பட அனைத்து சட்டவிரோத செயல்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுக்கப்படாதது வரை குமரி உளவுத்துறை தங்களது தோல்வியை ஒப்புக் கொள்வதை தவிர வேறு வழி இல்லை என்பதே மறுக்க முடியாத உண்மை.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.