Breaking News
டி.என்.பி.எல். கிரிக்கெட் தூத்துக்குடி அணி 4-வது வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் சேப்பாக் சூப்பர் கில்லீசை வீழ்த்தி தூத்துக்குடி அணி 4-வது வெற்றியை சுவைத்தது.

டி.என்.பி.எல். கிரிக்கெட்

8 அணிகள் இடையிலான 2-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) கிரிக்கெட் தொடர் சென்னை, நெல்லை, நத்தம் ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இந்த நிலையில் நேற்றிரவு நெல்லையில் நடந்த 12-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்சும், சேப்பாக் சூப்பர் கில்லீசும் மோதின. முதல் 3 ஆட்டங்களில் ஓய்வு எடுத்த தூத்துக்குடி கேப்டன் தினேஷ் கார்த்திக் அணிக்கு திரும்பினார்.

டாஸ் ஜெயித்த தூத்துக்குடி கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கவுசிக் காந்தியும், வாஷிங்டன் சுந்தரும் களம் புகுந்தனர். சூப்பர் பார்மில் உள்ள இவர்கள் இந்த ஆட்டத்திலும் மிரட்டினர். குறிப்பாக வாஷிங்டன் சுந்தர் அதிரடி ஜாலத்தால் உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். யோமகேஷின் ஒரே ஓவரில் 4 பவுண்டரிகளை விரட்டியடித்தார். அவ்வப்போது சிக்சரும் பறக்க விட்டார். இதனால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 11.1 ஓவர்களில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை தொட்டது. நடப்பு தொடரில் இந்த கூட்டணி 3-வது முறையாக 100 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கிறது.

வாஷிங்டன் சுந்தர் சதம்

ஒரு வழியாக இந்த ஜோடியின் வீறுநடைக்கு சுழற்பந்து வீச்சாளர் அலெக்சாண்டர் முட்டுக்கட்டை போட்டார். அணியின் ஸ்கோர் 107 ரன்களை (12.1 ஓவர்) எட்டிய போது அலெக்சாண்டரின் பந்து வீச்சில் கவுசிக் காந்தி 35 ரன்களில் (33 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து வந்த தினேஷ்கார்த்திக் (0) அதே ஓவரில் கிளன் போல்டு ஆனார். 3-வது விக்கெட்டுக்கு ஆட வந்த ஆனந்த் 13 ரன்னில் வெளியேற்றப்பட்டார்.

இதன் பின்னர் ரன்வேகம் கொஞ்சம் குறைவது போல் தெரிந்தாலும், மறுமுனையில் வாஷிங்டன் சுந்தரின் அதிரடி நீடித்ததால் அந்த அணி சவாலான ஸ்கோரை நோக்கி பயணிப்பது தடுக்க இயலவில்லை. மேலும் கில்லீஸ் அணியின் பீல்டிங்கும் மெச்சும்படி இல்லை.

அபாரமாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் 59 பந்துகளில் சதத்தை ருசித்தார். இந்த சீசனில் அடிக்கப்பட்ட முதல் சதம் இது தான். மொத்தத்தில் டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இது 2-வது சதமாக பதிவானது. ஏற்கனவே கடந்த ஆண்டு திருவள்ளூர் வீரன்ஸ் வீரர் பாபா அபராஜித் சதம் (118 ரன்) எடுத்திருந்தது நினைவு கூரத்தக்கது.

தூத்துக்குடி 178 ரன்கள்

கடைசி ஓவரை வீசிய அந்தோணி தாசின் பந்துவீச்சில் ஆகாஷ் சும்ரா 2 சிக்சரும், ஒரு பவுண்டரியும் விளாசினார். அடுத்த பந்தில் வாஷிங்டன் சுந்தர் (107 ரன், 61 பந்து, 11 பவுண்டரி, 4 சிக்சர்) ரன்-அவுட் ஆனார். 20 ஓவர் முடிவில் தூத்துக்குடி அணி 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது.

இதன் பின்னர் கடின இலக்கை நோக்கி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கோபிநாத்தும், கேப்டன் சதீசும் அடியெடுத்து வைத்தனர். 2-வது ஓவரில் சதீஷ் (0) தேவையில்லாமல் ரன்-அவுட் ஆக, அதே ஓவரில் கோபிநாத் (1) கிளன் போல்டு ஆகிப்போனார்.

இதன் பின்னர் தலைவன் சற்குணமும், அந்தோணிதாசும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். பேட்டை வேகமாக சுழட்டியடித்த அந்தோணிதாஸ் சில சிக்சர்களை தூக்கியடித்தார். ஸ்கோர் 62 ரன்களை எட்டிய போது, தலைவன் சற்குணமும் (19 ரன்), அடுத்த ஓவரில் அந்தோணிதாசும் (43 ரன், 27 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) வெளியேற கில்லீஸ் அணியின் நம்பிக்கை தகர்ந்தது.

கில்லீஸ் தோல்வி

தூத்துக்குடி பவுலர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து, கில்லீஸ் அணியை இலக்கை நெருங்க விடாமல் கட்டுப்படுத்தினர். 20 ஓவர்களில் சேப்பாக் சூப்பர் கில்லீசால் 8 விக்கெட்டுக்கு 151 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் தூத்துக்குடி அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட வாஷிங்டன் சுந்தர், இந்த விருதை தனது தாய்-தந்தைக்கு சமர்ப்பிப்பதாக கூறினார்.

தூத்துக்குடி அணி தொடர்ச்சியாக பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். ஏற்கனவே திண்டுக்கல், திருச்சி, காரைக்குடி அணிகளை தோற்கடித்து இருந்தது. 3-வது லீக்கில் ஆடிய சேப்பர் சூப்பர் கில்லீஸ் அணிக்கு இது முதல் தோல்வியாகும்.

ஸ்கோர் போர்டு

தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்

வாஷிங்டன் சுந்தர்(ரன்-அவுட்) 107

கவுசிக் காந்தி (சி) மகேஷ்

(பி) அலெக்சாண்டர் 35

தினேஷ் கார்த்திக் (பி)

அலெக்சாண்டர் 0

ஆனந்த் (சி) ஜோசப் (பி)

சாய் கிஷோர் 13

ஆகாஷ் சும்ரா (நாட்-அவுட்) 15

நாதன் (நாட்-அவுட்) 1

எக்ஸ்டிரா 7

மொத்தம் (20 ஓவர்களில்

4 விக்கெட்டுக்கு) 178

விக்கெட் வீழ்ச்சி: 1-107, 2-108, 3-134, 4-177

பந்து வீச்சு விவரம்

யோ மகேஷ் 3-0-37-0

சதீஷ் 1-0-10-0

ஜோசப் 4-0-34-0

சாய் கிஷோர் 4-0-23-1

அந்தோணி தாஸ் 4-0-50-0

அலெக்சாண்டர் 4-0-22-2

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

கோபிநாத் (பி) அதிசயராஜ் 1

சதீஷ் (ரன்-அவுட்) 0

அந்தோணிதாஸ் (சி) ஆனந்த்

(பி) லட்சுமண் 43

தலைவன் சற்குணம் (சி) காந்தி

(பி) வாஷிங்டன் 19

வசந்த் சரவணன் (சி) அண்ட்

(பி) அவுசிக் ஸ்ரீனிவாஸ் 8

சசிதேவ் (சி) காந்தி (பி)

அவுசிக் ஸ்ரீனிவாஸ் 10

கார்த்திக் (நாட்-அவுட்) 39

மகேஷ் (ரன்-அவுட்) 7

சாய் கிஷோர்(சி) கணேஷ்

மூர்த்தி (பி) அதிசயராஜ் 0

ஜோசப் (நாட்-அவுட்) 8

எக்ஸ்டிரா 16

மொத்தம் (20 ஓவர்களில்

8 விக்கெட்டுக்கு) 151

விக்கெட் வீழ்ச்சி: 1-2, 2-2, 3-62, 4-73, 5-89, 6-99, 7-138, 8-138

பந்து வீச்சு விவரம்

கணேஷ் மூர்த்தி 3-0-21-0

அதிசயராஜ் டேவிட்சன் 3-0-29-2

லட்சுமண் 2-0-25-1

வாஷிங்டன் சுந்தர் 4-0-15-1

அவுஷிக் ஸ்ரீனிவாஸ் 4-0-30-2

ஆகாஷ் சும்ர 4-0-28-0

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.