Breaking News
தினகரன், புகழேந்தி மீதான தேச துரோக வழக்கில் அக். 24 வரை போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

நீட் விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து துண்டுபிரசுரம் வழங்கியதாக தினகரன், புகழேந்தி உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட தேச துரோக வழக்கில் அடுத்த விசாரணை வரும் வரை எந்த நடவடிக்கையும் போலீஸார் எடுக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் விவகாரத்தில் விலக்கு பெற உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் வழங்கியதாக தினகரன் அணியை சேர்ந்த சேலம் மாவட்ட செயலாளர் வெங்கடாச்சலம், டிடிவி.தினகரன், புகழேந்தி, உள்ளிட்ட 17 பேர் மற்றும் அடையாளம் காட்டக்கூடிய 20 பேர் மீது கே.ஆர்.எஸ். சரவணன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சேலம் அன்னதானபட்டி காவல் நிலையத்தில் தேசதுரோக வழக்கு உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு  செய்தனர்.

இதை எதிர்த்து எப்.ஐ.ஆரை ரத்து செய்யக்கோரி புகழேந்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில் “பொய்யான புகாரில், தன் மீது பழி வாங்கும் நோக்கத்துடன் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், துண்டு பிரசுரத்தில் தன்னுடைய படம் இடம்பெற்றதாலேயே தன் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் ஆனால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சசிகலா, தினகரன் படங்கள் நோட்டிஸில் உள்ளது போலதான் தனது புகைப்படமும் இடம் பெற்றருந்தது, இதில் என் பெயரை தேவை இல்லாமல் எப்.ஐ.ஆரில் சேர்த்துள்ளனர்” என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து தனக்கு தெரியாது எனவும், அதை யார் அச்சிட்டனர் என்ற விவரமும் தெரியாது என மனுவில் தெரிவித்திருந்தார். எனவே உள்நோக்கத்தோடு பதிவு செய்யப்பட்ட வழக்கின் மேல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும், எஃப்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, புகழேந்தி தரப்பில் வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜராகி, மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கருத்து தெரிவிப்பது தவறில்லை, அரசியல் காரணங்களுக்காக அதிகாரிகளை தவறாக பயன்படுத்தக்கூடாது என உச்ச நீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியுள்ளது ஆனாலும் அதை கடைபிடிக்க மறந்து விடுகிறார்கள் என குறிப்பிட்டார்.

இது பற்றி காவல்துறை தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கேட்டனர். காவல்துறை பதிலளிக்கும் வரை வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டுமென புகழேந்தி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி, போலீஸார் பதிலளிப்பதற்கு முன்னர் தடை விதிக்க முடியாது, போலீஸார் பதிலளிக்கும் வரை தினகரன், புகழேந்தி உள்ளிட்ட யார் மீதும் முதல் தகவல் அறிக்கை மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்ககூடாது என காவல்துறைக்கு அறிவுறுத்தும்படி அரசு வழக்கறிஞரிடம் தெரிவித்தார்.

மேலும் வழக்கு குறித்து சேலம் அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளர் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.