Breaking News
கமலுக்கு ஆதரவாக பிரகாஷ் ராஜ் ‘டுவிட்டர் வாய்ஸ்’

நடிகர் கமல்ஹாசன் பத்திரிகையில் ஒரு தொடர்கட்டுரை எழுதி வருகிறார். சமீபத்தில் அவர் எழுதியிருந்த பதிவில் கூறியிருந்ததாவது:-

கலாசாரம், பண்டிகை, இறை வழிபாடு, இசை, கலை என்று பல வழிகளிலும் பழமையைப் பரப்ப முற்படுகின்றனர். மற்ற மதங்களில் உள்ள வலதுசாரிகளும் பதிலுக்கு எதிர்வாதம் செய்யவும் எதிர்வினை ஆற்றவும் கிளம்புகிறார்கள். இது தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு தழுவிய ஒரு சீரழிவு.

ஒரு தலைமுறையே சாதிய வித்தியாசங்கள் தெரியாமல் வளர்ந்து வரும் வேளையில், பழைமைவாதிகள் புகுந்து சாதி வித்தியாசங்களைப் போதிக்கத் தொடங்கிவிட்டார்கள். அதன் பிரதிபலிப்பாக இணையதளத்தில் சினிமாக் கலைஞர்களைச் சாதிவாரியாகப் பிரித்துப் பட்டியலிடும் வேலைகள் பகிரங்கமாக நடக்கின்றன.

முன்பெல்லாம், இத்தகைய இந்து வலதுசாரியினர் வன்முறையில் ஈடுபடாமல், வாதப் பிரதிவாதங்கள் மூலமே எதிராளியை கையாண்டனர். இப்போது அது ஒத்து வராததால் அவர்களும் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர். ‘எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள்?’ என்ற சவாலை இனி அவர்கள் விட முடியாது. அந்த அளவுக்கு அவர்கள் கூட்டத்திலும் தீவிரவாதம் பரவியிருக்கிறது.

வாய்மை வெல்லும் என்ற நம்பிக்கை போய், வலிமை வெல்லும் என்ற நம்பிக்கை, நம்மை காட்டுமிராண்டிகள் ஆக்கிவிடும். இருந்தாலும், தமிழகம் சமூகச் சீர்திருத்தத்திற்கு முன்னுதாரணம் ஆகும் நாள் தொலைவில் இல்லை. இன்றைய நிலையில் அந்த முன்னுதாரணமாய் கேரளம் திகழ்கிறது. அதற்கு வாழ்த்துகள்!

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

கமலின் இந்த கருத்துக்கு சுப்பிரமணிய சாமி உள்ளிட்ட சில பா.ஜ.க. தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரிகள் கமலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.