Breaking News
ஆந்திராவில் உறவினர் இறுதி சடங்குக்காக வங்கி வரிசையில் கண்ணீருடன் காத்திருந்த பெண்: முதல்வர் சந்திரபாபு நாயுடு உதவி

சாலை விபத்தில் உயிரிழந்த உறவினரின் இறுதி சடங்குக்காக வங்கியில் பணம் எடுக்க கண்ணீருடன் காத்திருந்த பெண்ணை, தொலைக்காட்சி நேரலையில் கண்டு முதல்வர் சந்திரபாபு நாயுடு உதவ முன் வந்த சம்பவம் அனைவரையும் நெகிழச்சி அடைய வைத்துள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூரில், வாரகாசு மையம் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் பணம் எடுப்பதற்காக நீண்ட வரிசையில் ஒரு பெண் காத்திருந்தார். அப்போது மக்கள் பிரச்சினை குறித்து நேரலை நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்த தனியார் டிவி சேனல் ஒன்று அந்த பெண்ணின் சோகமான முகத் தையும் காண்பித்தது. மேலும் அந்த பெண்ணிடம் பேட்டி எடுத்தபோது, தனது பெயர் கீதாரத்னம் என்றும் சாலை விபத்தில் உயிரிழந்த உறவினருக்கு இறுதி சடங்கு செய்வதற்காக பணம் இல்லாததால், வங்கியில் பணம் எடுக்க வந்ததாகவும் கூறி கதறி அழுதார்.

அதே சமயம் விஜயவாடாவில் இந்நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, உடனடியாக நெல்லூர் மாவட்ட ஆட்சியர் முத்தியாலராஜுவை தொடர்பு கொண்டு அந்தப் பெண் விரைவில் பணம் எடுக்க உதவி செய்யுமாறு உத்தரவிட்டார்.

உடனடியாக வங்கி மேலாளருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வரிசையில் நின்றிருந்த கீதாவை மட்டும் வங்கி மேலாளர் அழைத்தார். இதனால் அங்கிருந்தவர்கள் அனைவரும் திகைப்படைந்தனர். பின்னர் நடந்த சம்பவங்களை கீதாவிடம் விவரித்த வங்கி மேலாளர் இறுதி சடங்குக்காக அவர் கேட்ட ரூ.40 ஆயிரம் பணத்தையும் உடனடி யாக வழங்கி அனுப்பி வைத்தார்.

இதைத் தொடர்ந்து அந்த டிவி சேனலை அணுகிய கீதா, தனக்கு உடனடியாக உதவ முன் வந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு, மாவட்ட ஆட்சியர் மற்றும் வங்கி மேலாளருக்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்து விடைபெற்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.