Breaking News
இந்திய ஜூனியர் கால்பந்து வீரர்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து (17 வயதுக்குட்பட்டோர்) கால்பந்து போட்டி கடந்த மாதம் இந்தியாவில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில் இந்திய அணி மூன்று ஆட்டங்களிலும் தோற்று முதல் சுற்றுடன் வெளியேறியது. உலக கோப்பை கால்பந்து தொடர் ஒன்றில் இந்திய அணி பங்கேற்றது இது தான் முதல்முறையாகும்.

இந்த நிலையில் இந்திய ஜூனியர் கால்பந்து வீரர்கள் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர். தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட வீரர்களிடம், தோல்வியால் துவண்டு போய் விடக்கூடாது, இதை கற்றுக்கொள்வதற்கு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் ஊக்கப்படுத்தினார்.

ஒவ்வொரு வீரர்களும் தனித்தனியாக பிரதமருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். அந்த படங்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ள பிரதமர் ஒவ்வொரு வீரர்களின் தனித்திறமைகளையும் புகழ்ந்துள்ளார். ஜியாக்சன் சிங் பற்றி கூறும் போது, ‘இந்திய கால்பந்து வரலாற்றில் இவரின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும். மணிப்பூரைச் சேர்ந்த இவர் தான், உலக கோப்பை கால்பந்து போட்டியில் கோல் அடித்த முதல் இந்தியர் ஆவார். அவரை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டார்.

முன்னதாக வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசுகையில், ‘இந்த சந்திப்பு எனது தனிப்பட்ட விருப்பத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது. உங்கள் எல்லோரிடமும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் இருப்பதை பார்க்கிறேன். களத்தில் செயல்பட்ட விதத்தை வைத்து உங்களை மக்கள் தெரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். எனவே உங்களுக்கு இனி மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. உங்களது எதிர்காலத்திற்கு தயாராகுவதற்கு ஒரு வாய்ப்பாகவே இந்த உலக கோப்பையை கருத வேண்டும். தொடர்ந்து ஒரு அணியாக ஒருங்கிணைந்து விளையாடி தங்களை நிலைநிறுத்திக்கொண்டு, வெற்றிகளை கொண்டு வருவீர்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.