Breaking News
தமிழ்நாட்டில் முட்டை விலை வரலாறு காணாத உயர்வு ‘ஆம்லேட்’ விலையை உயர்த்த முடிவு

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு விலை நிர்ணய குழு நாள்தோறும் முட்டை விலையை நிர்ணயம் செய்து வந்தது. நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதம் 1–ந்தேதி ஜி.எஸ்.டி. அமலான பின்னர், முட்டை விலை நிர்ணயம் வாரத்துக்கு 3 முறை என்று மாற்றி அமைக்கப்பட்டது.

உற்பத்தி, தேவை, ஏற்றுமதி ஆகியவற்றின் அடிப்படையில் முட்டை விலையில் ஏற்ற, இறக்கம் இருந்து வருகிறது. தற்போது காய்கறிகள் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்துள்ளதால், இல்லத்தரசிகள் கவனம் முட்டை பக்கம் திரும்பி உள்ளது. எனவே பெரும்பாலான இல்லங்களில் முட்டை குழம்பு, ‘ஆம்லேட்’, பொடி மாஸ் என சமையலில் முட்டை ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இதனால் முட்டை தேவை அதிகரித்து, அதன் விலையில் தொடர்ந்து ஏற்றம் காணப்பட்டு வந்தது.

இந்தநிலையில் நாமக்கலில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு விலை நிர்ணய குழு கூட்டத்தில், ஒரு முட்டையின் விலை 42 காசு உயர்த்தப்பட்டது. இதன் மூலம் வரலாறு காணாத வகையில் முட்டை கொள்முதல் விலை 5 ரூபாய் 16 காசு என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் மாநில தலைவர் நல்லதம்பி ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:–

தமிழ்நாட்டில் ஆயிரம் கோழி பண்ணைகள் உள்ளன. இதில் நாமக்கல் மண்டலத்தில் மட்டும் 800 பண்ணைகள் இருந்தன. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நிலவிய வறட்சியால் பல பண்ணைகள் மூடப்பட்டன. இதனால் தினசரி முட்டை உற்பத்தி 3.25 கோடியில் இருந்து 3 கோடியாக குறைந்தது.

இந்தநிலையில் காய்கறிகள் விலை முட்டை விலைக்கு நிகராக அதிகரித்துள்ளது. மொத்த கொள்முதல் விலையில் ஒரு கிலோ முட்டை (200 எண்ணிக்கை) ரூ.110 விற்பனை செய்யப்படுகிறது. அதே விலையில் தான் ஒரு கிலோ காய்கறிகளும் விற்பனை செய்யப்படுகிறது. எனவே தேவை அதிகரிப்பால் முட்டை விலை உச்சத்தை தொட்டுள்ளது. கோழி இறைச்சியும் கிலோவுக்கு ரூ.10 விலை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நாமக்கல் மொத்த கொள்முதல் விலையில் நேற்று ஒரு முட்டை 4 ரூபாய் 74 காசாகவும், மொத்த விற்பனையில் 5 ரூபாய் 45 காசாகவும், சில்லரை விற்பனையில் 6 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இந்தநிலையில் 42 காசு அதிகரிக்கப்பட்டதையடுத்து இன்று(வெள்ளிக்கிழமை) முதல் கொள்முதல் விலை ஒரு முட்டை 5 ரூபாய் 16 காசு ஆகும். மொத்த விற்பனையில் 5 ரூபாய் 90 காசாகவும், சில்லரை விற்பனையில் 6 ரூபாய் 50 காசாகவும் முட்டை விற்பனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் சில்லரை தட்டுப்பாட்டை காரணம் காட்டி சில வியாபாரிகள் ஒரு முட்டையை ரூ.7–க்கு விற்பனை செய்வதற்கு வாய்ப்பும் உள்ளது.

முட்டை விலை உயர்வால் ஓட்டல்களில் ‘ஆம்லேட்’, ‘ஆப்–பாயில்’, ‘புல்–பாயில்’ என முட்டை வகை உணவுகள் விலையை உயர்த்த உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.100–க்கு மேல் விற்பனை ஆனது. அப்போது பெரும்பாலான ஓட்டல்களில் ‘ஆம்லேட்’ விலை ரூ.15 ஆக உயர்த்தப்பட்டது.

எனினும் சில ஓட்டல்களில் ‘ஆம்லேட்’ விலை ரூ.12 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது அந்த ஓட்டல்களில் ஆம்லேட் விலையை ரூ.15 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளனர்.

‘ஆம்லேட்’ விலையை ரூ.15–க்கு விற்பனை செய்யும் ஓட்டல்களில் விலையை மேலும் அதிகரித்தால் வாடிக்கையாளர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்ற யோசனையில் உரிமையாளர்கள் உள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.