Breaking News
சசிகலா கணவர் நடராஜன் மீதான சொகுசு கார் வழக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை உறுதி

சசிகலாவின் கணவர் நடராஜன் 1994-ம் ஆண்டு லண்டனிலிருந்து, ‘லெக்சஸ்’ என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார்.  இந்த கார் 1993–ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என்றும், பயன்படுத்தப்பட்ட பழைய வாகனம் என்றும், போலி ஆவணங்களை தயாரித்து, காரை இறக்குமதி செய்துள்ளார். இதன்மூலம் ரூ.1 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக கூறி எம்.நடராஜன், பாஸ்கரன், லண்டனை சேர்ந்த பாலகிருஷ்ணன், யோகேஸ் பாலகிருஷ்ணன் உள்பட பலர் மீது குற்றம் சுமத்தி சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு, எம்.நடராஜன் உள்பட 4 பேருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த 2010–ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், எம்.நடராஜன் உள்பட தண்டனை பெற்றவர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீண்டகாலமாக ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணையை துரிதப்படுத்தக்கோரி சி.பி.ஐ. தரப்பில், ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில், இன்று தீர்ப்பளித்த சென்னை ஐகோர்ட், சிறப்பு நீதிமன்றம் நடராஜனுக்கு விதித்த இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை உறுதிப்படுத்தியது. உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் நடராஜனுக்கு, சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது .

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.