Breaking News
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல்: பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இடையே பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலுடன் 4 மாகாணங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவி நீக்கப்பட்டார்.

தற்போது இடைக்கால அரசு பொறுப்பில் உள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது. வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெறும்.

நாடு முழுவதும் சுமார் 10. 5 கோடி மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிப்பார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், மாகாண சட்டப்பேரவை என 2 வாக்குகளைப் பதிவு செயகிறார்கள்.

பாகிஸ்தானில், சிந்து, பலுசிஸ்தான், பஞ்சாப், கைபர் பக்துன்கவா ஆகிய 4 மாகாணங்கள் உள்ளன. நாடாளுமன்றத் தேர்தலுடன் இந்த 4 மாகாணங்களுக்கும் சேர்த்தே இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

வாக்குப்பதிவு நிலையங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க 7 லட்சத்துக்கு அதிகமாக பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 17,000 வாக்குப்பதிவு நிலையங்கள் பதற்றமானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கூடுதலாக பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தேர்தலில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் ஷெரீப் (பிஎம்எல்-என்) கட்சிக்கும், முன்னாள் கிரிக்கெட் வீரரும் அரசியல் வாதியுமான இம்ரான் கானின் பாகிஸ்தான் தெரிக் இ இன்சாப் (பிடிஐ) கட்சிக்கும் இடையில்தான் முக்கிய போட்டி நிலவுகிறது.

எனினும், பிலாவல் புட்டோ சர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியும், அதன் கூட்டணி கட்சியான முத்தாஹிதா மஜ்லிஸ் இ அமால் கட்சியும் கணிசமானத் தொகுதிகளைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.