Breaking News
தேசிய அரசியலில் கருணாநிதி பதித்த சில முத்திரைகள்

தேசிய அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும் வகையில் திமுக தலைவர் மு. கருணாநிதி பெரும் பங்கு வகித்துள்ளார். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவற்றில் சில…

காங்கிரஸின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி மிசா சட்டம் கொண்டு வந்தார். அதற்கு எழுந்த கடுமையான எதிர்ப்புகளுக்கு பின் முதன் முறையாக தான் எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என கல்கத்தாவின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் இந்திரா காந்தி பேசி இருந்தார். இதை ஏற்று டெல்லி வந்த கருணாநிதி, தன் கட்சி எம்.பி.யாக இருந்த இரா.செழியன் வீட்டில் வாஜ்பாய் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை அழைத்து ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தினார். இது, அடுத்த மக்களவை தேர்தலில் ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சி அமைய வித்திட்டதாகக் கருதப்படுகிறது.

மிசாவுக்குப் பிறகு காங்கிரஸுடன் நாடு முழுவதிலும் உள்ள அரசியல் கட்சிகள் விலகியே நின்றன. அப்போது 1980-ன் மக்களவை தேர்தலில் முதல் கட்சியாக திமுக தலைவர் கருணாநிதி காங்கிரஸுடன் கூட்டணி வைத்தார்.

இதில், திமுகவுக்கு சட்டப் பேரவையில் எதிர்பார்த்த இடங்கள் கிடைக்கவில்லை என்றாலும், காங்கிரஸ் கட்சி, மீண்டும் ஆட்சி அமைத்தது. அதன் நாடாளுமன்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் எம்பி அல்லாதவரான கருணாநிதியும் அழைக்கப்பட்டார். இதுபோல், நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கட்சி கூட்டங்களில் எம்.பி. அல்லாத முதல் தலைவராக கருணாநிதி கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் கீழே அமர்ந்திருந்தவரை இந்திரா காந்தி மேடைக்கு அழைத்து அமர வைத்தார்.

1989 முதல் 1990 வரை பிரதமராக இருந்தவர் வி.பி.சிங். இவரது கட்சியான ஜனதா தளம் தலைமையில் அமைந்த தேசிய முன்னணி கூட்டணியில் திமுகவும் இடம் பெற்று இருந்தது. ஆனால், அதற்கு தமிழகத்தில் ஒரு எம்.பி கூட கிடைக்கவில்லை. எனினும், கருணாநிதியை தனிப்பட்ட முறையில் மதிக்கும் வகையில் வி.பி.சிங், திமுகவை தன் அமைச்சரவையில் இணைத்துக் கொண்டார். இதுவும் பல வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாக மத்திய அரசில் நிகழ்ந்த நடைமுறை ஆகும்.

பல்வேறு காரணங்களுக்காக மாநிலங்கள் மீது ஆணையம் அமைப்பது மத்திய அரசின் வழக்கம். ஆனால், முதல் மாநிலமாக தமிழக அரசு மத்திய அரசின் மீது ஒரு ஆணையம் அமைத்த வரலாறு கருணாநிதியை சேரும். 1968-ல் தமிழக முதல்வரான கருணாநிதி ’மாநில சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி’ என ஒரு புதிய கொள்கையை அறிவித்தார். இதற்கு வலுசேர்க்கும் வகையில் மறுவருடம் நீதிபதி பி.வி.ராஜமன்னார் தலைமையில் ஒரு ஆணையம் அமைத்தார். இது, மத்திய, மாநில அரசுகள் இடையிலான உறவு எப்படி இருக்க வேண்டும் என ஆய்வு செய்தது. இதில், மாநில, மத்திய அரசுகளுக்கான முக்கிய முடிவுகள் இருதரப்பின் ஆலோசனைக்கு பிறகே அமைய வேண்டும் எனக் கூறப்பட்ட நடைமுறை இன்றும் அமலில் உள்ளது. நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் பலன் அளித்த நிகழ்விற்கு அப்போது கருணாநிதி தேசிய அளவில் பாராட்டப்பட்டார்.

ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் மற்றும் ஜனவரி 26 குடியரசு தினம் ஆகிய விழாக்களில் மாநிலத் தலைநகரங்களில் அதன் ஆளுநர்கள் மட்டுமே கொடியேற்றும் வழக்கம் இருந்தது. ஆனால், டெல்லியில் குடியரசு தலைவர் ஜனவரி 26-லும், பிரதமர் ஆகஸ்ட் 15-ல் செங்கோட்டையிலும் கொடி ஏற்றி வந்தனர். இதை அப்போதைய பிரதமராக இருந்த இந்திராகாந்தியிடம் சுட்டிக் காட்டிக் கடிதம் எழுதினார் முதல்வராக இருந்த கருணாநிதி. இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு, அனைத்து மாநிலங்களிலும் தற்போது முதல்வர்கள் ஆகஸ்ட் 15-ல் தேசிய கொடியை ஏற்றி மகிழ்கின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.