Breaking News
இலங்கை போருக்கும், காங்கிரசுக்கும் தொடர்பு இல்லை திருநாவுக்கரசர் பேட்டி

ராஜபக்சே தன்னை காப்பாற்றிக்கொள்ள ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பார். இலங்கை போருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பு இல்லை என திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் மின்சாதன பராமரிப்பு பணி என்ற பெயரில் எந்தந்த பகுதிகளில் எத்தனை மணிநேரம் மின்வெட்டு என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் துறை அமைச்சரோ, தமிழகத்தில் மின்வெட்டே இல்லை என உண்மைக்கு மாறாக பொய் சொல்வது தவறாகும்.

இயற்கை சீற்றம் ஏற்பட்டால் மின்வெட்டு ஏற்படாமல் இருக்க ஒரு மாதத்துக்கு தேவையான நிலக்கரியை அரசு கையிருப்பு வைத்து இருக்கவேண்டும். தமிழக அரசு இதில் திட்டமிட்டு செயல்படவில்லை.

ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை விவகாரத்தில் பொதுமக்களிடம் ஓட்டெடுப்பு நடத்தப்படவில்லை. தி.மு.க. உள்பட சில கட்சிகள், அமைப்புகள் கருத்துகளை தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிதான் பாதிக்கப்பட்டது. ராஜீவ்காந்தி கொல்லப்பட்டது வருத்தமளிக்கிறது. அதற்காக பழிவாங்க நினைக்கவில்லை.

சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றுதான் ராகுல்காந்தி சொல்லி இருக்கிறார். அவர்களை விட்டுவிடுங்கள் என்று சொல்லவில்லை. அதைத்தான் நாங்களும் சொல்கிறோம். 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டுமா?, வேண்டாமா? என்பதை சட்டப்படி செய்யட்டும்.

கையெழுத்து போடக்கூடாது என்று யாரும் கவர்னரின் கையை பிடித்து தடுக்கவில்லை. விடுதலை செய்ய சட்டத்தில் அனுமதி இருந்தால் கவர்னர் செய்ய வேண்டியதுதானே. சிக்கல் இருப்பதால் கவர்னர் கையெழுத்து போடக்கூடாது என்று வலியுறுத்துகிறோம்.

தமிழக அரசு பரிந்துரை செய்து அனுப்பியும் சட்டப்படி வாய்ப்பு இல்லை என்பதால் கவர்னர் கையெழுத்து போடவில்லை. ராஜீவ்காந்தி காங்கிரஸ் கட்சி தலைவராக, பிரதமராக இருந்தார். அவர் கொலையில் வெளிநாட்டு சதி உள்ளது. இதன் பின்னணியில் யார் எல்லாம் இருக்கிறார்கள்?. பல நாடுகள் சம்பந்தப்பட்டு இருக்கலாமா? என விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது.

இந்தநேரத்தில் 7 பேரின் விடுதலையை வலியுறுத்தி கவர்னருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது தவறாகும்.

ராகுல்காந்தி மனிதாபிமான அடிப்படையில் கூறினாலும் குண்டு வெடிப்பில் இறந்தவர்களின் குடும்பத்தினர் இதை எதிர்க்கிறார்கள். அவர்களுக்கு தலைவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

ராஜபக்சே தன்னை காப்பாற்றிக்கொள்ள ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பார். இலங்கையில் நடந்த போருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பு இல்லை. இலங்கையில் அமைதி ஏற்பட அந்த நாடு எடுத்த முடிவுக்கும், காங்கிரசுக்கும் என்ன சம்பந்தம்.

ஒரு காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு உதவியதே காங்கிரஸ் கட்சிதான். இந்திராகாந்தி செய்த உதவிபோல் யார் செய்தது?. தமிழகத்தில் முகாம் அமைத்து பயிற்சி எடுத்தபோது இந்திராகாந்தி அனுமதி இல்லாமல் எம்.ஜி.ஆர். அனுமதி தந்து இருப்பாரா?. ராஜீவ்காந்தி கொலை செய்யப்படும் வரை போர் தளவாடங்கள் உள்பட பல உதவிகள் செய்யப்பட்டது.

ராஜீவ்காந்தி கொலை செய்யப்படாமல் இருந்து இருந்தால் பிரபாகரன் உயிருடன் இருந்து இருக்கலாம். ராஜீவ்காந்தியை கொலை செய்ததுதான் பெரிய தவறாகும். அதன்பின்னர்தான் இலங்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டது. ராஜீவ்காந்தி கொல்லப்படாமல் இருந்திருந்தால் தனி ஈழம் பிறந்து இருக்குமா? என்று தெரியாது. ஆனால் பிரபாகரன் இறந்து இருக்க மாட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.