Breaking News
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் ஆய்வு

சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவில் புகழ்பெற்றதாகும். இங்கு மயில் வடிவத்தில் அம்பிகை, சிவனை வணங்கி சாப விமோசனம் பெற்றார் என்பது ஐதீகம்.

இதனை உணர்த்தும் வகையில் கோவிலில் புன்னை மரம் அருகே உள்ள புன்னைவனநாதர் சன்னதியில் மயில் வடிவத்தில் பார்வதி தேவி, வாயில் மலரை வைத்து சிவனை வழிபடுவது போன்ற சிலை இருந்தது. இது சுமார் 1,000 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது.
கடந்த 2004-ம் ஆண்டு இந்த கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்துக்கான திருப்பணியின்போது பக்தர்களின் எதிர்ப்பையும் மீறி, மயில் வடிவ அம்பிகை சிலை சேதமடைந்ததாக கூறி அந்த சிலைக்கு பதிலாக புதிய மயில் சிலையை, வாயில் பாம்பை கவ்வியபடி அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோன்று பழமையான ராகு, கேது சிலைகளும் மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு

இது சம்பந்தமான புகாரின்பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் கடந்த ஆகஸ்டு மாதம் இந்த கோவிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கோவிலின் இணை ஆணையர் காவேரியிடமும், ஓய்வுபெற்ற கோவில் அர்ச்சகர்கள் 3 பேர் உள்பட 5 அர்ச்சகர்களிடம் விசாரணை மேற்கொண்டு, கோவில் சிலைகள் மற்றும் அது குறித்த கோப்புகளையும் பார்வையிட்டு சென்றனர்.

பொன்மாணிக்கவேல் ஆய்வு

இந்த நிலையில் நேற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள சாமி சிலைகளை ஆய்வு செய்தனர்.

சுமார் 1 மணி நேரம் கோவிலின் உள்ளே சோதனையில் ஈடுபட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இன்றும்(வெள்ளிக்கிழமை) இந்த ஆய்வு தொடரும் என கூறப்படுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.