Breaking News
“என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்

இந்தி பட உலகை தொடர்ந்து, தமிழ் திரையுலகமும் பாலியல் புகார்களால் அதிர்ச்சியில் ஆட்டம் கண்டு வருகிறது. அந்த வரிசையில் சமீபகாலமாகவே ஊடகங்களில் விவாத பொருளாக காட்சியளித்து வருபவர்கள் கவிஞர் வைரமுத்துவும், பிரபல பின்னணி பாடகி சின்மயியும் தான்.
‘சுவிட்சர்லாந்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது கவிஞர் வைரமுத்து என்னை ஓட்டல் அறைக்கு தனியாக வருமாறு அழைத்தார். நான் மறுத்துவிட்டேன். என்னை போல அவரால் தொல்லை அனுபவித்தவர்கள் பலரும் உண்டு. எனவே இதுபோன்ற பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக பாதிக்கப்பட்டோர் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கவேண்டும்’, என்று கூறி ஒட்டுமொத்த திரையுலகையுமே அதிர செய்தார் சின்மயி.

கவிஞர் வைரமுத்து மீதான சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டு திரையுலகில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டரில் ஒரு விளக்கம் அளித்திருந்தார்.

அதில் ‘அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன். அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை. உண்மையைக் காலம் சொல்லும்’, என்று குறிப்பிட்டார்.

கவிஞர் வைரமுத்து விளக்கம் தெரிவித்த சில நிமிடங்களிலேயே, ‘அவர் ஒரு பொய்யர்’ என்று பாடகி சின்மயி தனது டுவிட்டரில் பதிவிட்டார்.

காரசாரமான விவாதங்கள் முன்னெடுக்கப்பட்ட போதும், ஆதரவு-எதிர்ப்பு கருத்துகள் வந்தபோதும் கவிஞர் வைரமுத்து மீது தான் தெரிவித்த குற்றச்சாட்டுகளில் இருந்து சின்மயி பின்வாங்கவே இல்லை.

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த சின்மயிக்கு ஆதரவாக பலரும் கருத்து வெளியிட்டு இருந்தனர். நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சித்தார்த், நடிகை ஸ்ரீரெட்டி உள்ளிட்ட திரையுலகினரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இது சமூக வலைதளங்களில் கடுமையான விவாத பொருளாக உருவெடுத்தது.

‘கவிஞர் வைரமுத்து மீது நான் அளித்திருக்கும் குற்றச்சாட்டு உண்மையானது. நான் இதுவரை கூறிய குற்றச்சாட்டுக்கு அவர் மறுப்பு தெரிவிக்காதது ஏன்?’, என்றும் கூறி மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். மேலும் ‘வக்கீல்களுடன் ஆலோசித்து சட்ட ரீதியாக கவிஞர் வைரமுத்து மீது நடவடிக்கை எடுப்பேன்’, என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கத்தை தவிர எந்தவித மறுப்பும் கவிஞர் வைரமுத்து இதுவரை தெரிவிக்காமலேயே இருந்தார். இந்தநிலையில் சின்மயி குற்றச்சாட்டு எழுப்பி ஏறக்குறைய ஒரு வாரம் ஆன நிலையில் கவிஞர் வைரமுத்து தனது மவுனத்தை கலைத்து மறுப்பு தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து கவிஞர் வைரமுத்து ஒரு வீடியோ பதிவை நேற்று வெளியிட்டார். அதில் அவர் பேசியிருப்பதாவது:-

வணக்கம் என் மீதும் சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் எல்லாம் முழுக்க, முழுக்க பொய்யானவை. முற்றிலும் உள்நோக்கம் உடையவை. அவை உண்மையாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் என் மீது வழக்கு தொடுக்கலாம். சந்திக்க காத்திருக்கிறேன். மூத்த வக்கீல்களோடும், அறிவுலகத்தின் ஆன்றோர்களோடும் கடந்த ஒரு வார காலமாக ஆழ்ந்து ஆலோசித்து வந்தேன்.

அசைக்க முடியாத ஆதாரங்களை தொகுத்து, திரட்டி வைத்திருக்கிறேன். நீங்கள் வழக்கு போடலாம். சந்திக்க காத்திருக்கிறேன். நான் நல்லவனா… கெட்டவனா? என்று இப்போது யாரும் முடிவு செய்யவேண்டாம். நீதிமன்றம் சொல்லட்டும். நீதிக்கு தலைவணங்குகிறேன்.

உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும்
பாடகி சின்மயி டுவிட்டரில் பதிவு
கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து பரபரப்பாக பேசப்பட்டு வருபவர், பாடகி சின்மயி. தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்ட டுவிட்டர் பதிவுக்கு, ‘அவர் ஒரு பொய்யர்’ என்று பதில் பதிவிட்டு அதிர்வலையை ஏற்படுத்தினார்.

இந்தநிலையில் தன் மீதான குற்றச்சாட்டு முழுக்க பொய் என்று கவிஞர் வைரமுத்து தன்னிலை விளக்கம் கொடுத்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். இதற்கிடையில் பாடகி சின்மயியும் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில், ‘வைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும். அதுதான் சரியானது’, என்று கூறியுள்ளார். சின்மயியின் இந்த கருத்து தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.

‘சந்த கவிஞர் மீது சந்தேகம் வலுக்கிறது’ வைரமுத்து விளக்கம் குறித்து தமிழிசை விமர்சனம்

பாடகி சின்மயி விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து நேற்று தன்னிலை விளக்கம் அளித்து வீடியோ காட்சி ஒன்றை வெளியிட்டார். இதுகுறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் டுவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார். அதில், “சந்தி சிரித்தபின் சந்திக்கிறேன் என்கிறார் கவிஞர்… நிந்திக்க அவகாசம் கொடுத்து ஒரு வாரம் கழித்து சிந்திக்க வேண்டிய அவசியம் என்ன? சந்தக் கவிஞர் மீது சந்தேகமே அதிகரிக்கிறது……….” என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.