Breaking News
இம்ரான்கான் உதவியாளர் நியமனத்தில் சர்ச்சை : பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு விளக்கம் கேட்கிறது

பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான்கான், நெருங்கிய நண்பரான ஜூல்பிகார் உசேன் புகாரி என்பவரை தனது சிறப்பு உதவியாளராக (வெளிநாடு வாழ் பாகிஸ்தானியர் நலன் மற்றும் மனித வள மேம்பாடு) கடந்த செப்டம்பர் மாதம் நியமனம் செய்தார். அவரது நியமனம், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நியமனத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் லாகூரை சேர்ந்த முகமது அதில் சாத்தா, மிர்சா அப்துல் மொயிஸ் பெய்க் ஆகிய 2 பேர் வழக்கு தொடுத்துள்ளனர்.

அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் கருத்து தெரிவிக்கையில், ‘‘ முக்கிய பதவிகளில் நியமனங்கள் செய்வது தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் தேசிய நலன்கள்தான் கருத்தில் கொள்ளப்படவேண்டும். அது நட்பின் அடிப்படையில் அமையக்கூடாது’’ என சாடினார்.

ஜூல்பிகார் உசேன் புகாரி வக்கீல் அசன் வாதிடுகையில், ‘‘பிரதமர் தனது சிறப்பு ஆலோசகர்களை நியமிக்க அதிகாரம் இருக்கிறது’’ என கூறினார்.

உடனே தலைமை நீதிபதி, ‘‘உயர் பதவிகளில் நியமனம் செய்கிறபோது தகுதி தவிர்த்து சொந்தம், பந்தம், நட்பு என பார்க்கக்கூடாது’’ என கண்டித்தார்.

மேலும் என்ன அடிப்படையில் அவர் நியமிக்கப்பட்டார், அவரது பணி நியமன குறிப்பை தயார் செய்யுமாறு உத்தரவிட்டது யார் என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஜூல்பிகார் உசேன் புகாரி வக்கீல் அசன், ‘‘ஜூல்பிகார் உசேன் புகாரிக்கு அரசியல் சாசன பதவி அளிக்கப்படவில்லை. அலுவல் விதிகள் படிதான் அவரது நியமனம் அமைந்துள்ளது’’ என பதில் அளித்தார்.

முடிவில் அவரது பணி நியமனம் தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை அடுத்த மாதம் 5–ந் தேதிக்கு தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் ஒத்திவைத்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.