Breaking News
மறைப்பதற்கு நிறைய வைத்து இருப்பவர்கள் சி.பி.ஐ. அமைப்பிற்கு பயப்பட வேண்டும்; அருண் ஜெட்லி

ஆந்திர பிரதேசத்தில் சி.பி.ஐ. அமைப்பு சோதனைகள் மற்றும் விசாரணைகளை மேற்கொள்ள வழங்கிய அனுமதியை அம்மாநில அரசு திரும்ப பெற்றது. இந்த உத்தரவை அடுத்து ஆந்திரா எல்லைக்குள் சி.பி.ஐ. எந்த ஒரு சோதனையும் மேற்கொள்ள முடியாது, விசாரிக்கவும் முடியாது.

சி.பி.ஐ. டெல்லி சிறப்புப்படை பிரிவு சட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த சட்டத்தின்படி, டெல்லியில் மட்டுமே சி.பி.ஐ. அதிகாரம் பெற்றது. பிற மாநிலங்களில் நுழைய அம்மாநிலங்களில் ஒருமனதான சம்மதத்தை பெற வேண்டியது கட்டாயமாகும். இந்நிலையில் ஆந்திராவில் சி.பி.ஐ.யின் அதிகாரத்தை தடுக்கும் வகையில் ரகசிய உத்தரவை அம்மாநில உள்துறை கொள்கை செயலாளர் ஏ.ஆர். அனுராதா நவம்பர் 8-ம் தேதி பிறப்பித்துள்ளார்.

இது போல் கர்நாடகாவும் சி.பி.ஐ.க்கான அனுமதியை திரும்ப பெற்றுள்ளது.

தற்போது சந்திரபாபு நாயுடுவை தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்திற்குள் நுழைய மம்தா பானர்ஜி சி.பி.ஐ.க்கு தடை விதித்து உள்ளார்.

இந்த நிலையில், மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, மறைப்பதற்கு நிறைய வைத்து இருப்பவர்கள் எனது மாநிலத்திற்குள் சி.பி.ஐ. நுழைய கூடாது என கூறுவார்கள்.

ஊழல் விவகாரத்தில் எந்த மாநிலத்தின் மீதும் இறையாண்மை என்பது கிடையாது. ஆந்திராவின் நடவடிக்கையானது அச்சத்தினால் ஏற்பட்டு உள்ளது. இந்த தருணத்தில் இதனை தவிர்த்து வேறு எதுவும் நான் கூறவில்லை என கூறினார்.

இந்தியாவில் மத்திய அமைப்பு ஒன்றை நாம் கொண்டுள்ளோம். இதன் கீழ் தொடக்கத்தில் அரசு ஊழியர்களை விசாரிக்க உருவாக்கப்பட்ட சி.பி.ஐ. அமைப்பு ஆனது, மாநிலங்கள் அல்லது நீதிமன்றங்கள் பரிந்துரைக்கும் சில தீவிர வழக்குகளையும் விசாரணை மேற்கொண்டு வருகிறது என அவர் கூறியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.