Breaking News
பாஜக ராமரை வழிபடவில்லை, ராவணனையே வழிபடுகிறது : மம்தா பானர்ஜி விமர்சனம்

கடவுள் ராமரின் பெயரால் மக்களிடையே பிரிவினையை தூண்ட பாஜக முயற்சிக்கிறது என்று மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமருக்கு கோவில் கட்டவேண்டும் என்று விசுவ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றன. இதற்கு கடும் எதிர்ப்பு உள்ளது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், இந்த பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை.

இந்த நிலையில் விசுவ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி அங்கு 2 நாள் மாநாடு நடந்தது. நிறைவு நாளான நேற்று இந்த மாநாட்டில் நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த ஏராளமான இந்து மத ஆன்மிக தலைவர்கள், மடாதிபதிகள், சாமியார்கள், துறவிகள், ராம பக்தர்கள் என 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இதில், ராமர் கோயில் கட்டுவதற்கான தேதியை, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிவிக்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம், ஜம்போனி பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், மம்தா பானர்ஜி பேசியதாவது:- “அனைத்து மதத்தினரும் சமம் என்ற கோட்பாட்டை, திரிணமூல் காங்கிரஸ் கடைப்பிடிக்கிறது. கடவுளின் பெயரால் வாக்குகளை கவர வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது.ஆனால், ராமரின் பெயரால் மக்களிடையே பிரிவினையை தூண்ட பாஜக முயன்று வருகிறது. இத்தகைய செயலில் ஈடுபடுவதன் மூலம் உண்மையிலேயே அவர்கள் ராம பிரானை வழிபடவில்லை; ராவணனைதான் துதிக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

மத்திய பாஜக அரசு, நிதி நிர்வாகத்தை முறையாக மேற்கொள்ளவில்லை. ஜன் தன் திட்டம், மிகப் பெரிய ஊழல் என்பது விரைவில் அம்பலமாகும். வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்டு, ஏழை மக்களுக்கு வழங்குவோம் என்று பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை” என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.