Breaking News
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி 90 ரன்னில் சுருண்டு ‘பாலோ-ஆன்’ ஆனது யாசிர் ஷா ஒரே நாளில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தினார்

பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 2-வது நாளில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 418 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. அதிகபட்சமாக ஹாரிஸ் சோகைல் 147 ரன்னும், பாபர் அசாம் ஆட்டம் இழக்காமல் 127 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்து இருந்தது. ஜீத் ராவல் 17 ரன்னுடனும், டாம் லாதம் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. அணியின் ஸ்கோர் 50 ரன்னாக இருந்த போது ஜீத் ராவல் (31 ரன்கள்) யாசிர் ஷா பந்து வீச்சில் போல்டு ஆனார். அதன் பின்னர் விக்கெட்டுகள் மள, மளவென்று சரிந்தன. 35.3 ஓவர்களில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 90 ரன்னில் சுருண்டு ‘பாலோ-ஆன்’ ஆனது. கடைசி 40 ரன்களுக்குள் நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அதிகபட்சமாக டாம் லாதம் 22 ரன்களும், கேப்டன் கனே வில்லியம்சன் 28 ரன்களும் (நாட்-அவுட்) எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கை தாண்டவில்லை. இதில் 6 வீரர்கள் ரன் கணக்கை தொடங்காமல் ஆட்டம் இழந்ததும் அடங்கும். பாகிஸ்தான் அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா 8 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

‘பாலோ-ஆன்’ ஆகி தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 43 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்தது. ஜீத் ராவல் 2 ரன்னிலும், கேப்டன் கனே வில்லியம்சன் 30 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இரண்டு விக்கெட்டையும் யாசிர் ஷா வீழ்த்தினார். டாம் லாதம் 44 ரன்னுடனும், ராஸ் டெய்லர் 49 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

நேற்று ஒரே நாளில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா 10 விக்கெட்டுகள் சாய்த்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் ஒரேநாளில் 10 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் பாகிஸ்தான் வீரர் பெருமையை யாசிர் ஷா பெற்றார். அத்துடன் டெஸ்ட் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு பவுலரின் சிறப்பான பந்து வீச்சு இதுவாகும். மேலும் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு பவுலரின் சிறந்த பந்து வீச்சாகவும் இது பதிவானது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.