Breaking News
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்தி 82 ஆண்டு கால சாதனையை முறியடித்தார், யாசிர் ஷா

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்தி 82 ஆண்டு கால சாதனையை முறியடித்தார்.
கடைசி டெஸ்ட் கிரிக்கெட்

நியூசிலாந்து–பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே நியூசிலாந்து அணி 274 ரன்னும், பாகிஸ்தான் அணி 348 ரன்னும் எடுத்தன.

பின்னர் 74 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 3–வது நாள் ஆட்டம் முடிவில் 14 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்து இருந்தது. கேப்டன் கனே வில்லியம்சன் 14 ரன்னுடனும், வில்லியம் சோமர்வில்லே ஒரு ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
யாசிர் ஷா புதிய சாதனை

நேற்று 4–வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணியின் வில்லியம் சோமர்வில்லேவின் (4 ரன்) விக்கெட்டை பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்த்தினார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் யாசிர் ஷா வீழ்த்திய 200–வது விக்கெட் இதுவாகும். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை 32 வயதான யாசிர் ஷா படைத்தார். அவர் 33 டெஸ்ட் போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தினார். இதற்கு முன்பு 1936–ம் ஆண்டில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் கிளாரி கிரிம்மெட் 36 டெஸ்ட் போட்டியில் 200 விக்கெட் மைல்கல்லை எட்டியதே சாதனையாக இருந்து வந்தது. அந்த 82 ஆண்டு கால சாதனையை யாசிர் ஷா நேற்று முறியடித்து புதிய வரலாறு படைத்தார்.

சோமர்வில்லே வெளியேறிய பிறகு களம் கண்ட ராஸ் டெய்லர் 22 ரன்னில் ‘அவுட்’ ஆனார். அப்போது அந்த அணி 4 விக்கெட்டுக்கு 60 ரன்களுடன் பரிதவித்தது. அடுத்து 5–வது விக்கெட்டுக்கு ஹென்றி நிகோல்ஸ், கனே வில்லியம்சனுடன் இணைந்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். கனே வில்லியம்சன் 154 பந்துகளில் 12 பவுண்டரியுடன் சதத்தை எட்டினார். அவர் அடித்த 19–வது சதம் இதுவாகும்.
5–வது விக்கெட்டுக்கு அபாரம்

நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் நியூசிலாந்து அணி 2–வது இன்னிங்சில் 104 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது. 5–வது விக்கெட்டுக்கு வில்லியம்சன், ஹென்றி நிகோல்ஸ் ஜோடி 212 ரன்கள் சேர்த்து அசத்தியது. வில்லியம்சன் 139 ரன்னுடனும் (282 பந்துகளில் 13 பவுண்டரியுடன்), ஹென்றி நிகோல்ஸ் 90 ரன்னுடனும் (243 பந்துகளில் 8 பவுண்டரியுடன்) களத்தில் நின்றனர். பாகிஸ்தான் அணி தரப்பில் யாசிர் ஷா, ‌ஷகீன் ஷா அப்ரிடி தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

இன்று 5–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. நியூசிலாந்து அணி 198 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அந்த அணியின் கைவசம் 6 விக்கெட்டுகள் உள்ளது. எனவே இந்த ஆட்டம் டிராவில் முடியவே அதிக வாய்ப்பு உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.