Breaking News
பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று: தொடக்க லீக் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி

பெண்கள் உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தகுதி சுற்று போட்டியில் நேற்று நடந்த தொடக்க லீக் ஆட்டத்தில் இந்திய அணி 114 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

பெண்கள் உலக கோப்பை தகுதி சுற்று
11–வது பெண்கள் உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் ஜூன் 26–ந் தேதி முதல் ஜூலை 23–ந் தேதி வரை நடக்கிறது. கடந்த ஆண்டு நடந்த ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் முதல் 4 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 4 அணிகள் நேரடியாக இந்த போட்டிக்கு தகுதி பெற்றன. இந்திய அணி 5–வது இடம் பெற்றதால் தகுதி வாய்ப்பை மயிரிழையில் கோட்டை விட்டது.

பெண்கள் உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் எஞ்சிய 4 அணிகள் எவை? என்பதை நிர்ணயிக்கும் பெண்கள் உலக கோப்பை ஒருநாள் தகுதி சுற்று கிரிக்கெட் போட்டி இலங்கையில் நேற்று தொடங்கியது. இதில் 10 அணிகள் கலந்து கொண்டுள்ளன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

4 அணிகள் தகுதி பெறும்
‘ஏ’ பிரிவில் இந்தியா, இலங்கை, அயர்லாந்து, ஜிம்பாப்வே, தாய்லாந்து ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்காளதேசம், ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்றுக்கு முன்னேறும்.

வருகிற 21–ந் தேதி வரை நடைபெறும் இந்த தகுதி சுற்று போட்டியில் ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்றில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். அரை இறுதிக்கு தகுதி பெறும் 4 அணிகளும் உலக போட்டிக்கு முன்னேறும்.

இந்திய அணி வெற்றி
பெண்கள் உலக கோப்பைக்கான தகுதி சுற்று போட்டியில் கொழும்பில் நேற்று நடந்த தொடக்க லீக் ஆட்டத்தில் இந்தியா–இலங்கை (ஏ பிரிவு) அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தேவிகா வைத்யா 89 ரன்னும், கேப்டன் மிதாலி ராஜ் ஆட்டம் இழக்காமல் 70 ரன்னும், தீப்தி ‌ஷர்மா 54 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் 260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணி, இந்திய வீராங்கனைகளின் அபார பந்து வீச்சை சமாளித்து ரன் எடுக்க திணறியது. அந்த அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்களே எடுத்தது. இதனால் இந்திய அணி 114 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஹசினி பெரேரா 34 ரன்னும், சமாரி அட்டப்பட்டு 30 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் எக்தா பிஸ்ட், ராஜேஸ்வரி கெய்க்வாட் தலா 2 விக்கெட்டும், தீப்தி ‌ஷர்மா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இதே பிரிவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் அயர்லாந்து அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது.

பாகிஸ்தான் தோல்வி
‘பி’ பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் தென் ஆப்பிரிக்க அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை சாய்த்தது. இதே பிரிவில் நடந்த இன்னொரு லீக் ஆட்டத்தில் வங்காளதேச அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினியாவை ஊதி தள்ளியது.

இன்று (புதன்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் இலங்கை–அயர்லாந்து, இந்தியா–தாய்லாந்து (ஏ பிரிவு), தென் ஆப்பிரிக்கா–ஸ்காட்லாந்து, பாகிஸ்தான்–வங்காளதேசம் (பி பிரிவு) அணிகள் மோதுகின்றன.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.