Breaking News
தமிழகத்துக்கு வறட்சி நிவாரண நிதியாக மத்திய அரசு வெறும் 4 சதவீதம் மட்டுமே வழங்கி இருக்கிறது அதிர்ச்சி தகவல்

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, மராட்டியம், ஆந்திரா, தெலுங்கானா உள்பட 14 மாநிலங்கள் கடந்த 2015-16 முதல் 2017-18 வரையிலான 3 ஆண்டுகளில் கடுமையான வறட்சியை சந்தித்தன. இதற்கான மீட்பு நடவடிக்கைகளுக்காக வறட்சி நிவாரணமாக ரூ.1 லட்சத்து 63 ஆயிரத்து 605 கோடி கேட்டு மாநில அரசுகள், மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தன.

ஆனால் மத்திய அரசு ரூ.23,190.69 கோடி மட்டுமே மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது. மாநில அரசுகள் கேட்டுக்கொண்ட நிதியோடு ஒப்பிடுகையில், மத்திய அரசு வெறும் 19 சதவீதம் மட்டுமே வழங்கியிருக்கிறது.

கடந்த 2016-17-ம் ஆண்டு, தமிழகத்தில் உள்ள 16,682 வருவாய் கிராமங்களில், 13,305 கிராமங்கள் வறட்சி பாதித்த கிராமங்களாக கண்டறியப்பட்டன. 1,564 கிராமங்களில் நேரடியாக சென்று கள ஆய்வும் நடத்தப்பட்டது. இதில் 87 சதவீத பகுதிகள் 50 சதவீதத்துக்கும் அதிகமான சேதத்தை சந்தித்திருந்தன. இது பெரும்பாலான கிராமங்கள் கடுமையான வறட்சியை சந்தித்ததை எடுத்துக்காட்டியது.

இதையடுத்து ரூ.39,565 கோடி வறட்சி நிவாரணமாக வழங்கவேண்டும் என்று மத்திய அரசிடம், தமிழக அரசு கேட்டிருந்தது. ஆனால் மத்திய அரசு ரூ.1,748.28 கோடி மட்டுமே ஒதுக்கியது. மத்திய அரசு நிதி ஒதுக்க மறுத்ததையடுத்து, வறட்சி நிவாரண நிதியில் இருந்து அந்த 3 ஆண்டுகளில் தமிழக அரசு எதையுமே கேட்கவில்லை. தமிழக அரசு கேட்டுக்கொண்டதில், மத்திய அரசு வெறும் 4 சதவீதம் மட்டுமே வழங்கியிருக்கிறது. இதுதான் மத்திய அரசு சார்பில் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்ட வறட்சி நிவாரண நிதியில் மிகவும் குறைவான தொகை ஆகும்.

ராஜஸ்தான் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்கள் இதே காலக்கட்டத்தில் ஒவ்வொரு வருடமும் வறட்சி நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசிடம் நிதி உதவி கோரியிருந்தன. ராஜஸ்தான் ரூ.21,648 கோடி கேட்டு, மத்திய அரசிடம் இருந்து ரூ.2,387 கோடி பெற்றிருந்தது. இதேபோல ஆந்திரா ரூ.5,193 கோடி கேட்டு, ரூ.1,065.84 கோடி பெற்றிருந்தது. உத்தரகாண்ட் ரூ.91.97 கோடி வறட்சி நிவாரண நிதி கேட்டு, ரூ.70.22 கோடி பெற்றிருந்தது. இதுதான் நிதி உதவி கோரியதில், மத்திய அரசிடம் இருந்து அதிக தொகையை பெற்ற முதலாவது மாநிலம் ஆகும்.

மேற்கண்ட விவரம் விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அதிர்ச்சி தகவலில் தெரியவந்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.