Breaking News
கிரிக்கெட் பார்க்க வந்த விஜய் மல்லையாவை நோக்கி ‘திருடன், திருடன்’ என கோ‌ஷமிட்ட இந்திய ரசிகர்கள்

லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் லீக் ஆட்டத்தில் இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்தியாவில் 9 ஆயிரம் கோடி வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்டு இங்கிலாந்தில் தலைமறைவாக வசிக்கும் பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா தனது மகன், தாயாருடன் இந்த போட்டியை காண வந்திருந்தார்.

இதை கவனித்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களில் சிலர் ஆட்டம் முடியும் நேரத்தில், விஜய் மல்லையாவின் அருகில் சென்று நீங்கள் ஒரு திருடன், திருடன் என்று கோ‌ஷமிட்டனர். மேலும், நீங்கள் உண்மையிலேயே மனிதன் என்றால் தாய் நாட்டிடம் உடனடியாக மன்னிப்பு கேளுங்கள் என்றும் ஆவேசமாக கத்தினர். இதனால் போட்டியை பார்க்க வந்த விஜய் மல்லையா, மிகுந்த எரிச்சல் அடைந்தார். பின்னர், மைதான கேலரியில் இருந்து தாயார் மற்றும் குடும்பத்தினருடன் அவசர அவசரமாக வெளியேறினார்.

இதுபற்றி விஜய் மல்லையா, தனது டுவிட்டர் பதிவில், ‘‘கோ‌ஷமிட்டவர்கள் எனது தாயாரை தாக்கி விடாமல் பாதுகாக்கவே நான் வெளியேறினேன். என்னை நாடு கடத்துவது தொடர்பாக வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. அடுத்த கட்ட விசாரணை ஜூலை மாதம் நடக்கிறது’’ என்று தெரிவித்து உள்ளார்.

மேலும் தனது மகன் சித்தார்த்துடன் லண்டன் ஓவல் மைதான பின்னணியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ள அவர் இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு வாழ்த்தும் தெரிவித்து உள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.