Breaking News
தவான் காயம் எதிரொலி: ரிஷாப் பான்ட் இங்கிலாந்து விரைகிறார்

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், உலக கோப்பை போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பந்து தாக்கியதில் இடது கை பெருவிரலில் காயம் அடைந்தார். அவருக்கு பெருவிரலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவர் அடுத்த 4 ஆட்டத்தில் விளையாட முடியாது என்று தெரிகிறது. இருப்பினும் அவர் இன்னும் உலக கோப்பை போட்டி தொடரில் இருந்து விலகவில்லை. அவரது காயம் குணமடைய எவ்வளவு நாட்கள் பிடிக்கும் என்பதை மருத்துவ நிபுணர்களிடம் கலந்து ஆலோசித்து அதற்கு தகுந்த படி முடிவு எடுக்கலாம் என்று இந்திய அணி நிர்வாகம் நிதானம் காட்டி வருகிறது. தவான் காயம் குறித்து இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கருத்து தெரிவிக்கையில், ‘ஷிகர் தவானின் காயம் எந்த அளவுக்கு குணம் அடைகிறது என்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். 10 முதல் 12 நாட்கள் கழித்து தான் இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்க முடியும். மதிப்பு மிக்க வீரரான தவானை இன்னும் நீக்கம் செய்யவில்லை. மாற்று வீரர் தேவை என்ற நிலை ஏற்படும் போது அது குறித்து அறிவிக்கப்படும். மாற்று வீரர் முன்னதாகவே அணியினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவது எப்பொழுதும் நல்ல விஷயமாகும்’ என்றார்.

இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இளம் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷாப் பான்ட் இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறார். இந்திய அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டதின் பேரில் ரிஷாப் பான்ட் இங்கிலாந்து விரைகிறார். ஆனால் அவர் மாற்று வீரராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதனால் போட்டி நடைபெறும் நாட்களில் அவர் இந்திய அணியினருடன் வீரர்கள் அறையை பகிர்ந்து கொள்ளவோ?, அணியினருடன் ஒரே பஸ்சில் பயணிக்கவோ முடியாது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.