Breaking News
அயோத்தி தாக்குதல் வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கடந்த 2005-ம் ஆண்டு ஜூலை 5-ந்தேதி, அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி வளாகத்துக்குள் ஒரு ஜீப் அத்துமீறி புகுந்தது. அதில் வந்த 5 பேரும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் ஆவர்.

அவர்கள் கையெறி குண்டுகளை வீசினர். துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அப்போது காவலுக்கு இருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் 35 பேர், அவர்களை எதிர்கொண்டனர். ஒரு மணி நேர சண்டைக்கு பிறகு 5 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். அவர்கள் நேபாளம் வழியாக, ராமபக்தர்கள் போன்று வந்து இந்த தாக்குதலில் ஈடுபட்டனர். 2 அப்பாவிகளும் இந்த தாக்குதலில் பலியானார்கள். 3 போலீசார் காயம் அடைந்தனர்.

பயங்கரவாதிகளுக்கு 5 பேர் உதவியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தை சேர்ந்த இர்பான் கான், காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த ஆஷிக் இக்பால், ஷகீல் அகமது, முகமது நசீம், முகமது அஜிஸ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பிரயாக்ராஜில் (அலகாபாத்தில்) உள்ள நைனி ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

பிரயாக்ராஜில் உள்ள தனிக்கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்றது. நைனி ஜெயிலில் உள்ள 5 பேரிடம் காணொலி காட்சி மூலம் விசாரணை நடந்தது.

14 ஆண்டு காலமாக நீடித்த இந்த வழக்கில், தனி நீதிபதி தினேஷ் சந்த் நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தார்.

இர்பான், ஆஷிக் இக்பால், ஷகீல் அகமது, முகமது நசீம் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். தலா ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. சதித்திட்டம் தீட்டுதல், பயங்கரவாதிகளுக்கு உதவுதல் உள்ளிட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டன. மற்றொருவரான முகமது அஜிஸ், விடுதலை செய்யப்பட்டார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.