Latest News
குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க கோரிய வழக்கு : சி.பி.சி.ஐ.டி. 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவுகூட்டணி என்பதால் குட்டகுட்ட குனிய மாட்டோம் -பிரேமலதா விஜயகாந்த்குரூப்-4 தேர்வில் அழியும் மையால் எழுதி முறைகேடு 99 பேருக்கு வாழ்நாள் தடை 3 இடைத்தரகர்கள் கைது; 2 தாசில்தார்களிடம் விசாரணைசென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தினவிழா நாளை கொண்டாட்டம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடி ஏற்றுகிறார்டெல்லியில் ரூ.1,000 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் அழிப்புகுற்றப்பின்னணி கொண்டவர்களுக்கு தேர்தல் ‘டிக்கெட்’ கொடுக்கக்கூடாது: சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷன் யோசனை

குடிநீருக்காக கண்ணீர் சிந்தும் சென்னைவாசிகள் தண்ணீர் பற்றாக்குறையால் தங்கும் விடுதிகள் மூடல்

0

சென்னைவாசிகளின் சிந்தனையில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் ஓடிக்கொண்டே இருக்கும் ஒரே எண்ண ஓட்டம் தண்ணீர்… தண்ணீர்… என்பது மட்டுமாகத்தான் இருக்கமுடியும். சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் முற்றிலும் வறண்டு விளையாட்டு மைதானங்கள்போல காட்சியளிக்கின்றன. நிலத்தடிநீரும் அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது. இதனால் சென்னையில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

இதனால் வீதிகள் தோறும் தண்ணீருக்காக மக்கள் கவலை தோய்ந்த முகத்துடன் காலிக்குடங்களுடன் அலையும் பரிதாப காட்சிகளை அன்றாடம் பார்க்க முடிகிறது. கடல்நீரை குடிநீராக்குதல், கல்குவாரியில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரித்தல் உள்ளிட்ட பல்வேறு மாற்று ஏற்பாடுகளை செய்த பின்னரும் சென்னைவாசிகளின் தாகத்தை தீர்க்க முடியாதநிலை உள்ளது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் ஆழ்துளை கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரும் கானல் நீராக மாறிவிட்டது.

லாரிகள் மூலம் தண்ணீரை முறையாக வழங்க முடியாமல் சென்னை குடிநீர் வாரியம் திணறிவருகிறது. லாரி வருமா…தண்ணீர் கிடைக்குமா…என்ற ஏக்கத்தில் வழிமேல் விழி வைத்து மணிக்கணக்கில் சென்னைவாசிகள் காத்துக்கிடக்கிறார்கள்.

தண்ணீர் தட்டுப்பாடு பள்ளி-கல்லூரிகள், ஐஸ் உற்பத்தி தொழிற்சாலைகள், திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், ஐ.டி. நிறுவனங்கள், ஓட்டல்கள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் என பல்வேறு பிரிவுகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தண்ணீர் பற்றாக்குறையால் சில ஓட்டல்கள் மூடப்பட்டுவிட்டன. சில ஓட்டல்களில் உணவு பண்டங்களின் வகைகள் குறைக்கப்பட்டுள்ளது.

திருவல்லிக்கேணியில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ‘மேன்சன்’கள் (தங்கும் விடுதிகள்) உள்ளன. அவசர வேலைக்காக வெளியூர்களில் இருந்து வருபவர்கள், தனியார் கம்பெனிகள் மற்றும் அலுவலகங்களில் வேலை செய்யும் வெளியூர்களை சேர்ந்தவர்களுக்கு இதுதான் புகலிடமாக விளங்குகிறது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக திருவல்லிக்கேணியில் உள்ள தங்கும் விடுதிகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகிறது.

அங்கு தங்கியிருந்தவர்கள் சிலர் வேறு விடுதிகளுக்கும், சிலர் விடுமுறை எடுத்து சொந்த ஊர்களுக்கும் சென்றுவிட்டனர். பல தங்கும் விடுதிகளில் மோட்டார் இயக்கும் நேரம் அறிவிப்பு பலகைகளில் எழுதி ஒட்டப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் மட்டுமே தண்ணீரை பயன்படுத்திக்கொள்ளுமாறு தங்கியிருப்பவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவல்லிக்கேணியில் தங்கும் விடுதி நடத்திவரும் ஜான் ஆபிரகாம் கூறும்போது, “லாரி தண்ணீரை அதிக கட்டணம் கொடுத்து வாங்கவேண்டிய நிலை இருக்கிறது. வருமானம் முழுவதும் தண்ணீருக்காகவே செலவு செய்கிறோம். இதேநிலை தொடர்ந்தால் தங்கும் விடுதி கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை. குடிநீர் வாரியம் தண்ணீரே வழங்காமல் ரூ.4,689 கட்டணம் விதித்திருக்கிறது. இது எந்த வகையில் நியாயம்?” என்றார்.

சென்னை மற்றும் புறநகரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிர் விடுதிகள் உள்ளன. தண்ணீர் பஞ்சத்தால் 15 மகளிர் விடுதிகள் மூடப்பட்டுள்ளன. இங்கு தங்கியிருந்த பெண்கள் வேறு விடுதிகளுக்கு சென்றுவிட்டனர்.

தமிழ்நாடு விடுதி உரிமையாளர்கள் பொதுநல சங்கத்தின் நிறுவன தலைவர் ஷோபனா மாதவன் கூறுகையில், தனியார் தண்ணீர் லாரிகளை நம்பி விடுதிகளை நடத்துவது சாத்தியமில்லாதது. பல நாட்களுக்கு முன்பே பணம் கொடுத்தும் தண்ணீர் வினியோகம் செய்வதில்லை. விடுதிக்கு தேவைப்படும் தண்ணீர் இல்லாமல் ராமாபுரம், சைதாப்பேட்டை, ராஜீவ் காந்தி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்த 15 மகளிர் விடுதிகள் மூடப்பட்டுள்ளன” என்றார்.

தண்ணீர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி அதன் விலையையும் கணிசமாக உயர்த்திவிட்டனர். 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு டேங்கர் லாரி தண்ணீர் ரூ.1,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. இது தற்போது ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. தண்ணீர் லாரிக்கு கடுமையான கிராக்கி உள்ளதால் ஓய்வின்றி 24 மணி நேரமும் இயக்கப்படுகின்றன.

தினமும் லட்சக்கணக்கில் பயணிகள் வந்துசெல்லும் சென்டிரல் ரெயில் நிலையத்திலும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள கழிப்பறைகளுக்கு முறையாக தண்ணீர் வழங்க முடியாததால் அவை பல நேரங்களில் மூடப்பட்டு உள்ளது. ரெயில் நிலைய நடைமேடைகளில் உள்ள குழாய்களிலும் முறையாக தண்ணீர் வழங்கப்படவில்லை. ஒரு நாளைக்கு 30 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைப்பதாகவும், அதுபோதுமானதாக இல்லை என்றும் சென்டிரல் ரெயில் நிலைய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எழும்பூர் ரெயில் நிலைய அதிகாரிகள் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க புதுமுறையை கையாண்டு வருகின்றனர். கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் நேரங்களான காலை மற்றும் மாலை வேலைகளில் கழிப்பறை, நடைமேடைகளில் உள்ள குழாய்களில் தண்ணீர் தட்டுப்பாடு இன்றி வழங்கப்படுகிறது. ஆனால் மதிய நேரங்களில் தண்ணீர் முற்றிலுமாக வழங்கப்படுவதில்லை. இதைப்போல் சென்னையில் உள்ள புறநகர் ரெயில் நிலையங்களிலும் முறையாக தண்ணீர் வழங்கப்படவில்லை.

தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பெரும்பாலான மொட்டை மாடிகளில் துவைத்த துணிகள் தொங்குவதை பார்ப்பதே அரிதான ஒன்றாகிவிட்டது. தண்ணீர் கிடைக்கும்போது கொஞ்சம், கொஞ்சமாக துணிகளை துவைக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குளிப்பதற்கு பதில் பாதி வாளி தண்ணீரில் உடலை நனைத்துக்கொள்ளும் அவலநிலை உள்ளது. தண்ணீர் பிடிப்பதற்காக மக்கள் தினந்தோறும் சந்திக்கும் போராட்டத்தால் அவர்கள் வியர்வையும், கண்ணீரும் சிந்துகிறார்கள்.

தண்ணீரை எவ்வளவு விலை கொடுத்தும் வாங்குவதற்காக அடுக்குமாடி குடியிருப்புகளில் இருப்பவர்களும், வசதி படைத்தவர்களும் தயாராக இருக்கின்றனர். இதனால் டேங்கர் லாரியில் கொண்டு வரப்படும் தண்ணீரை அதிக விலை கொடுத்து வாங்குவதாக குடிசைவாசிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

சென்னைவாசிகள் அன்றாட தேவைகளுக்கு தண்ணீரை பெறுவதற்காக ஒவ்வொரு நாளும் கண்ணீர் சிந்தி வருகின்றனர். மழை பெய்து பூமி குளிர்ந்தால் மட்டுமே சென்னையில் தலைவிரித்து ஆடும் தண்ணீர் பஞ்சம் தீருவதற்கு வழி பிறக்கும். அதற்கான நாளை எதிர்நோக்கி பொதுமக்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

சென்னை காமராஜர் சாலையில் உள்ள கலங்கரை விளக்கத்தின் பின்புறம் மெரினா கடற்கரையில் அரசு சார்பில் அடி பம்புகள் 4 அமைக்கப்பட்டுள்ளன. இந்த பம்புகளில் மட்டுமே 24 மணி நேரமும் தண்ணீர் வருகிறது. இதனை நொச்சிக்குப்பம், நொச்சி நகர், சாந்தோம், காமராஜர் சாலை, மயிலாப்பூர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும், மெரினா கடற்கரை வியாபாரிகளும் பயன்படுத்தி வருகிறார்கள்.

15 அடி ஆழத்தில் அமைக்கப்பட்ட இந்த அடி பம்புகள் கடலுக்கு அருகில் இருந்தாலும் உப்புத்தன்மை இல்லாமல் சுவையான நீர் வருகிறது. சென்னையே தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும்போது, இந்த அடி பம்புகள் அந்த பகுதி மக்களின் தாகத்தை தீர்ப்பதற்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் சென்னைவாசிகள் மதிப்புமிக்கதாக கருதுகிறார்கள். ஆனால் குடிநீர் வாரிய நிலையங்களில் இருந்து தண்ணீர் பிடித்துச்செல்லும் பெரும்பாலான டேங்கர் லாரிகள் தண்ணீரை சாலையில் சிந்திக்கொண்டே தான் செல்கின்றன. வீணாகும் இந்த நீரை சேமித்தாலே ஒரு குடும்பத்தின் ஒரு நாள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யமுடியும்.

நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துவிட்டதால் ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் வருவதில்லை. இதனால் ஆழ்துளை கிணறுகளை மேலும் ஆழப்படுத்தும் பணிகள் ஆங்காங்கே நடந்துவருகிறது. இந்த வாகனங்களுக்கு (ரிக் லாரிகள்) சென்னையில் கடும் கிராக்கி நிலவுகிறது.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.