Breaking News
பாலியல் குற்றச்சாட்டு விசாரணைக்கு ரத்த மாதிரி வழங்க கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் மறுப்பு

கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர், கொடியேறி பாலகிருஷ்ணன். இவரது மகன் பினோய்க்கு கடந்த 2008-ம் ஆண்டு திருமணமாகி விட்டது. இவர் மீது 33 வயதான பீகார் பெண் ஒருவர் மும்பை ஒஷிவாரா போலீசில் பாலியல் புகார் அளித்து உள்ளார்.

துபாயில் பார் டான்சராக இருந்த போது பினோயுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் பினோயின் வேண்டுகோளின் பேரில் வேலையை விட்டு மும்பை அந்தேரியில் குடியேறியதாகவும் கூறியுள்ள அவர், அங்கு தன்னை திருமணம் செய்வதாக கூறி பலமுறை பினோய் கற்பழித்ததாகவும் தெரிவித்து உள்ளார்.

இதன் மூலம் தனக்கு ஒரு குழந்தை பிறந்ததாகவும் கூறியுள்ள அந்த பெண், இதை உறுதி செய்ய பினோய்க்கு மரபணு சோதனை நடத்த வேண்டும் எனவும் அந்த புகாரில் கூறியுள்ளார். பினோய் ஏற்கனவே திருமணமானவர் என தெரிந்ததால், அவரிடம் இருந்து அந்த பெண் பின்னர் விலகியதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் மும்பை ஐகோர்ட்டு மூலம் பினோய் முன்ஜாமீன் பெற்றார். மேலும் இந்த வழக்கை ரத்து செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்தநிலையில் ஒஷியாரா போலீஸ் நிலையத்தில் விசாரணை அதிகாரி முன் நேற்று பினோய் ஆஜரானார். அப்போது அவர் மரபணு சோதனைக்கு தனது ரத்த மாதிரியை வழங்க மறுத்து விட்டார். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருப்பதால், இது தொடர்பாக கோர்ட்டு முடிவு செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.

மேலும் தன் மீதான இந்த புகார் ஆதாரமற்றது எனக்கூறிய பினோய், தன்னிடம் இருந்து பணம் பறிப்பதற்காக போடப்பட்ட வழக்கு இது எனவும், அந்த பெண் தன்னிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டியதாகவும் கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் மீது பாலியல் புகார் கூறப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.