Breaking News
கேரளாவில் மக்கள் தொகை பதிவேடு பணியை நடத்தமாட்டோம்: மாநில மந்திரி சபை கூட்டத்தில் முடிவு

நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) தயாரிக்கும் பணிகளை மத்திய அரசு வருகிற ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை நடத்த முடிவு செய்துள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் ஒன்றும் சமீபத்தில் டெல்லியில் நடத்தப்பட்டது.

ஆனால் தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பது, என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்புக்கான முன்னோடி நடவடிக்கை எனக்கூறி எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் இந்த என்.பி.ஆர். நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் கேரளாவும், தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மாநிலத்தில் என்.பி.ஆர். நடவடிக்கைகளுக்கு தடை விதிப்பதாக சமீபத்தில் அரசு உத்தரவிட்டு இருந்தது.

இதன் தொடர்ச்சியாக மாநில மந்திரிசபை சிறப்பு கூட்டம் நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது. முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், கேரளாவில் தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணிகளை மேற்கொள்வது இல்லை என முடிவு எடுக்கப்பட்டது. எனினும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவு அளிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

மாநில அரசின் இந்த முடிவை மத்திய பதிவாளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கமிஷனருக்கும், மாநில மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனருக்கும் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

பின்னர் இது தொடர்பாக முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-

என்.பி.ஆர். நடவடிக்கைகள் மூலம் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) தயாரிப்புக்கு வழி ஏற்படுகிறது. இது அமல்படுத்தப்பட்டால் பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும் என்ற அச்ச உணர்வு மக்களிடையே நிலவுகிறது.

மாநிலத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு நடவடிக்கைகளை மேற்கொண்டால் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் என போலீஸ் தரப்பில் இருந்து அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகளால் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கையும் முடங்கும் என கலெக்டர்களும் அறிக்கை அளித்து உள்ளனர்.

மாநில மக்களுடைய இத்தகைய அச்சத்தை போக்கி, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை உறுதி செய்ய வேண்டிய அரசியல் சாசன கடமை அரசுக்கு இருக்கிறது. எனவே என்.பி.ஆர். நடவடிக்கைகளை மாநிலத்தில் மேற்கொள்வது இல்லை என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

இதற்கிடையே மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த கேரள அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த மாநில கவர்னர் ஆரிப்முகமது கான், இந்த விவகாரத்தில் தன்னிடம் எதுவும் விவாதிக்கவில்லை என குற்றம் சாட்டி இருந்தார். இது தொடர்பாக விளக்கம் அளிக்கு மாறும் அரசுக்கு அவர் அறிவுறுத்தி இருந்தார்.

இதைத்தொடர்ந்து மாநில தலைமை செயலாளர் டாம் ஜோஸ் நேற்று கவர்னரை சந்தித்து பேசினார். அப்போது, குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக மாநிலத்தில் அதிருப்தி அதிகரித்ததால்தான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் வேண்டுமென்றே விதிமீறலில் ஈடுபடவில்லை எனவும் டாம் ஜோஸ் விளக்கம் அளித்தார்.

ஆனால் இந்த விளக்கத்தை ஏற்க கவர்னர் மறுத்து விட்டார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.