Breaking News
வேலம்மாள் கல்வி குழுமத்தில் 2வது நாளாக வருமான வரி துறை சோதனை

மதுரையை சேர்ந்தவர் எம்.வி. முத்துராமலிங்கம். இவர், கடந்த 1986-ம் ஆண்டு அவருடைய தாயார் வேலம்மாள் பெயரில் சென்னை முகப்பேரில் 183 மாணவர்கள் மற்றும் 13 ஊழியர்களுடன் மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றை தொடங்கினார்.

பின்னர் திருவள்ளூர், காஞ்சீபுரம், சிவகங்கை, மதுரை, தேனி மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் வேலம்மாள் குழும நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. இதில் பொறியியல், மருத்துவம் மற்றும் பள்ளிகள் வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

தற்போது, வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருவதுடன், சுமார் 10 ஆயிரம் ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர். பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றவும், தொழில் ரீதியாகவும், உறுதியுடனும், அர்ப்பணிப்புடனும், வேறுபாடுகளுடனும் இயக்குவதற்காக வீரமாகாளி நினைவு நல அறக்கட்டளை, ரமணா கல்வி அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டன.

சென்னை முகப்பேர், சூரப்பட்டு மற்றும் பொன்னேரி ஆகிய 3 இடங்களில் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை எம்.வி. முத்துராமலிங்கத்தின் மகன்கள் எம்.வி.வேல்முருகன், எம்.வி.எம்.வேல்மோகன், எம்.வி.எம்.சசிகுமார் ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர்.

இந்த கல்வி நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக வருமான வரி செலுத்துவதில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக வருமான வரித்துறை தலைமை அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 250 வருமானவரித்துறை அதிகாரிகள், 50 குழுக்களாக பிரிந்து, வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்கள், முகப்பேரில் உள்ள நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் நேற்று காலை சோதனை நடத்தினர்.

சோதனையின்போது உள்ளே இருந்தவர்கள் வெளியே செல்வதற்கும், வெளியே இருந்தவர்கள் உள்ளே வருவதற்கும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. வருமானவரி சோதனை நடந்த இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து வருமானவரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-

வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக வரி செலுத்தாமல் முறைகேடுகளில் ஈடுபடுவதாக ரகசிய தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் அவர்கள் தாக்கல் செய்த வருமான வரி கணக்குளை ஆய்வு செய்தபோது முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து வேலம்மாள் கல்வி நிறுவனங்களில் வருமானவரி சோதனை நடத்தப்படுகிறது.

நிர்வாகிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்திய சோதனையில் சில முக்கிய சொத்து ஆவணங்கள், தஸ்தாவேஜூகள் கிடைத்து உள்ளன. அதுகுறித்து ஆய்வு நடந்து வருகிறது. இவற்றின் மொத்த மதிப்பு எவ்வளவு? அறக்கட்டளைக்கு வரும் பணங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பண பரிவர்த்தனைகள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதா? சொத்து ஆவணங்களின் மதிப்பு எவ்வளவு? என்பது குறித்து தற்போது எதுவும் கூற இயலாது. சோதனை முடிந்த பின்னர் முழுமையான தகவல் தெரியவரும். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

இதனிடையே, வேலம்மாள் கல்வி குழுமத்தில் 2வது நாளாக வருமான வரி துறை சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. இதன்படி, மதுரையில் வண்டியூர், சிந்தாமணி பகுதிகளில் உள்ள மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.

இதில், வரி ஏய்ப்பு பற்றிய முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சென்னை, மதுரை உள்பட 50 இடங்களில் இந்த சோதனை நடத்தப்படுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.