Breaking News
அமெரிக்காவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட கொரோனோ வைரஸ் காய்ச்சல்

சீனாவில் கொரோனோ வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கடந்த 2002 மற்றும் 2003ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சீனா மற்றும் ஹாங்காங்கில் சார்ஸ் நோய் கடுமையான பாதிப்பு ஏற்படுத்தியது. இதனால் அங்கு 650 பேர் வரை பலியாகினர். இதேபோன்று, கனடாவில் 44 பேரும், தைவானில் 37 பேரும், சிங்கப்பூரில் 33 பேரும், வியட்னாமில் 5 பேரும், அமெரிக்காவில் 4 பேரும், பிலிப்பைன்சில் 2 பேரும் சார்ஸ் நோய் தாக்குதலில் பலியாகினர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் சார்ஸ் பாதிப்பு ஏற்படுத்தியிருந்தது.

வைரஸ் பாதிப்பினால் ஏற்படும் இந்நோய் சுவாசத்தில் கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தி மனிதர்களில் மரணம் விளைவிக்கும். இந்த நிலையில், சீனாவில் சார்ஸ் தொடர்புடைய புதிய வகை கொரோனா வைரஸ் கடந்த வாரத்தில் 140 பேரிடம் பாதிப்பு ஏற்படுத்தி இருந்தது.

சீன தலைநகர் பெய்ஜிங்கிலும் வைரஸ் பாதிப்பு பரவியது. இந்த வைரசானது சீனாவின் வுகான் நகரில் முதலில் கண்டறியப்பட்டது. 1.1 கோடி பேர் வசித்து வரும் வுகானில் இந்த வைரஸ் பாதிப்பு பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து 170 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் அவர்களில் 9 பேர் தீவிர சிகிச்சையும் பெற்று வந்தனர்.

இந்நிலையில், வைரஸ் தாக்குதலுக்கு 89 வயது நிறைந்த 4வது நபர் பலியாகி உள்ளார் என வுகான் நகர சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்திருந்தது. இந்த வைரஸ் வுகானில் 200 பேரிடம் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது என்றும் தெரிவித்தது. இதனிடையே, வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.

இந்த வைரஸ் காய்ச்சல் அமெரிக்காவில் முதன்முறையாக கண்டறியப்பட்டு உள்ளது. இதுபற்றி அந்நாட்டு அதிகாரிகள் கூறும்பொழுது, 30 வயதுடைய அந்த மனிதர் அமெரிக்காவில் இருந்து வுகான் நகருக்கு பயணித்து உள்ளார்.

எனினும், வைரஸ் பாதிப்பு தோன்றியது என கூறப்படும் கடல்உணவு சந்தைக்கு அவர் செல்லவில்லை. அவர் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.