Breaking News
ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷாப் பண்ட் நியமனம்

புதுடெல்லி,

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக களம் இறங்க இருந்த ஸ்ரேயாஸ் அய்யர் சமீபத்தில் புனேயில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் பீல்டிங் செய்கையில் காயம் அடைந்தார். அவருக்கு இடது தோள்பட்டை இறங்கி இருப்பதால் விரைவில் ஆபரேஷன் செய்யப்படுகிறது. இதனால் அவர் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்கப்போவது யார்? என்ற கேள்வி எழுந்தது. மூத்த வீரர்கள் ஆர்.அஸ்வின், ரஹானே, ஸ்டீவன் சுமித், இளம் வீரர் ரிஷாப் பண்ட் ஆகியோரின் பெயர்கள் கேப்டன் பதவிக்கு பரிசீலனை செய்யப்பட்டன.

இந்த நிலையில் இந்த சீசனுக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக 23 வயது விக்கெட் கீப்பரான ரிஷாப் பண்ட் இருப்பார் என்று அந்த அணி நிர்வாகம் நேற்று இரவு அறிவித்தது. 2016-ம் ஆண்டில் இருந்து டெல்லி அணிக்காக விளையாடி வரும் ரிஷாப் பண்ட் முதல்முறையாக அணியை வழிநடத்த இருக்கிறார். அதிரடிக்கு பெயர் போன ரிஷாப் பண்ட் கேப்டன்ஷிப்பிலும் முத்திரை பதிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ரிஷாப் பண்ட் கூறுகையில், ‘டெல்லி அணியுடன் எனது ஐ.பி.எல். பயணம் 6 ஆண்டுக்கு முன்பு தொடங்கியது. இந்த அணிக்கு என்றாவது ஒரு நாள் கேப்டனாக வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எப்போதும் உண்டு. அந்த கனவு இன்று நனவாகியுள்ளது. அதை பணிவோடு ஏற்றுக்கொள்கிறேன்’ என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.